பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

செயலும் செயல் திறனும்



செய்யும்; அல்லது இழப்பாவது தவிர்ந்து போகலாம்.

ஊதியம் வரவில்லையே என்று யாரும் இடிந்துபோய் விடக்கூடாது. ஊக்கத்துடன் மேலும் உழைத்தல் வேண்டும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்; ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

(593)

என்பார் பேராசான். 'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்' (597) அஃதாவது பயன் சிதைந்தவிடத்து, அல்லது இழப்பு நேர்ந்தவிடத்து, உள்ளம் குறுகி, உழைப்பைத் தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள். உள்ளம் உறுதியுடையவர்கள் என்று மேலும் உழைப்புக்கு வலிவு சேர்ப்பார் அவர்.

எனவே, ஒரு செயல் வெற்றிக்குத் தாழ்ச்சியற்ற உழைப்பே முதலிலும் முடிவிலும் வேண்டற்பாலது என்று அறிந்து கொள்க. நம்மில் சிலர், புதிதாக ஒரு செயலில் ஈடுபடும்போது மிகவும் ஆர்வம் காரணமாக, மிக முடுக்கத்துடன் ஈடுபடுவர். பின் போகப் போக ஆர்வம் குன்றிச் செயலில் தொய்வு அடைந்துவிடுவர். முயற்சியில் தாழ்ந்துவிடுவர். இது பெரும்பாலான மக்களிடம் இயல்பாக இருக்கின்ற உணர்ச்சியாகும். எனவேதான் எடுத்துக்கொண்ட வினையில் பலர் தோல்வியுற்று விடுகின்றனர்.

8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்

நீள்வினையால் நீளும் குடி

(1202)

என்னும் திருக்குறளில் திருவள்ளுவப் பேராசான் ஒரு செயல் நீளச் செய்யப்பெறுதல் வேண்டும் என்பார். தொடர்ந்து, ஒரே உறுதியுடனும், ஊக்கத்துடனும் செய்யப் பெறுவதன் வழியாகத்தான், ஒரு செயல் முழு வெற்றி பெறும் என்பதைக் கட்டாயம் நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.

சிலர் ஏதாவது ஒரு வாணிகத்தில் தொடக்கத்தில் ஈடுபடுவார்கள். சில மாதங்கள் கழித்துப் பார்த்தால், தொடங்கிய வாணிகத்தை விட்டுவிட்டு, வேறொரு வாணிகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். காரணம் கேட்டால், அந்த வாணிகத்தில் அவ்வளவாகப் பயன் கிடைக்கவில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் புதிய வாணிகத்திலும் நெடுநாள்கள் அவர்கள் தங்கியிருப்பதில்லை. ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களைப் பார்த்தால், வாணிகத்தையே விட்டுவிட்டு, ஏதாவது ஒரு