பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

செயலும் செயல் திறனும்சூழல் ஒன்று வரும். எனவே அச்செயலில் இறங்கி விடுவோம். அதன் பிறகு, எதற்கடா இச்செயலில் இறங்கினோம் என்று வருந்தும்படி ஆகிவிடும். எனவே, அதை விட்டுவிட்டு வேறொரு செயலில் ஈடுபட முற்படுவோம். ஆனால், அவ்வாறு இரண்டாம் முறை ஈடுபடும் பொழுதாவது முதல் செயலில் எண்ணிப் பாராமல் இறங்கியது போல, ஈடுபட்டு விடக்கூடாது. இதில் கட்டாயம் ஒரு முறைக்குப் பலமுறை நன்றாக எண்ணிப் பார்த்து இறங்குதல் வேண்டும். இல்லெனில் இதிலும் அதே வகையான பொருள் இழப்பும் கால இழப்பும் ஏற்படலாம். அவை முன்னிலும் அதிக அளவினவாகவும் இருக்கலாம். இஃது அறியாமை அன்றோ? இதனைத் திருக்குறள் மிக அருமையாகவும் உணரும்படியாகவும் எச்சரிக்கை செய்து கூறுகிறது.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

(655)

'இவ்வினையை ஏன் செய்தோம்' என்று பின்னர் வருந்தும்படி ஒன்றைச் செய்ய வேண்டாம். அவ்வாறு அறியாமையாலும், அதிவிரைவாலும், அன்றைய தேவையாலும் அவ்வாறு செய்ய நேர்ந்துவிட்டாலும், மீண்டும் அவ்வாறு, பின்னர், வருந்தும்படியான செயற்பாடுகளைச் செய்ய முற்பட வேண்டாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை ஒருவன் ஒரு கல்லில் ஒருமுறை இடித்துக் கொள்வது பிழையன்று. அஃது அறியாமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதே கல்லில் பிறிதொரு முறையும் பின் பலமுறையும் இடித்துக் கொள்வது பேதைமையும் பிழையும் குற்றமுமாகும். இவ்விடத்தில் அறியாமைக்கும் பேதைமைக்கும் விளக்கம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அறியாமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை ஆகும். பேதைமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை ஆகும். அறியாதவன் பின்னர் தானேசுட அறிந்து கொள்ளலாம். அல்லது ஒருவன் அறிவித்தால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் பேதைமையான ஒருவன் என்றும் அறிந்து கொள்ளவே இயலாது. பேதைக்குச் சொன்னாலும் தோன்றது உணர்வு. இனி, திருவள்ளுவர், பேதைமைக்கு மிகத் தெளிவான இலக்கணம் கூறுவார். அஃதாவது இழப்பை வருவித்துக் கொண்டு, ஊதியத்தைப் போகவிடுவது பேதைமை என்பர்.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங் கொண்டு

ஊதியம் போக விடல்

(831)