பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும்

1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்

பொதுவாகவே அறிவு மூன்று காலத்துக்கும் உரியது. ஆனால் அதன் பயன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது. நேற்றைய அறிவால் இன்றைக்குப் பயன் வரும். இன்று பெறுகின்ற அறிவால் நாளைக்குப் பயன் வரும். ஆனால் இன்று பெறுகின்ற அறிவு நேற்றே பயனை விளைவித்திருக்க முடியாது. பயன் என்பது விளைவும் துய்ப்பும். எனவே ஒரு விளைவுக்கான அறிவு பின்னால் வந்து பயனில்லை. முன்னாலேயே அறிவு அறியப் பெற்றால்தான் அது பயன்தர முடியும். அதனால்தான், திருவள்ளுவப் பேராசான் எதிரதாக் காக்கும் அறிவு (429) என்று அதனைச் சிறப்பித்துக் கூறுவார்.

காலத்துக்கு ஏற்ப அறிவு மூன்று பெயர் பெறும். கடந்த கால அறிவு வரலாறு என்றும் நிகழ்கால அறிவு வாழ்க்கை என்றும், எதிர்கால அறிவு அறிவியல் என்றும் பெயர் பெறும்.

செயலைப் பொறுத்த அளவில் முதலிரண்டு அறிவு நிலைகள் கட்டாயம் ஒருவர்க்கு வேண்டும். எதிர்கால அறிவு ஆராய்க்குப் பின்னால் விளைவது, முன்னிரண்டு நிலைகளால் அறிவு துலங்கத் துலங்க, எதிர்கால அறிவு நமக்குத் தானே விளங்கும். எதிர்கால அறிவைப் பெறுவதில் நமக்கு விழிப்புணர்வு பயன்படுகின்றது. விழிப்போடிருப்பது எச்சரிக்கை.

2. எச்சரிக்கை உணர்வு

தொழில் நிலையில் இவ்வெச்சரிக்கை உணர்வு நமக்கு எப்பொழுதுமே இருத்தல் வேண்டும். இதைச் செய்தால் இது விளையும் என்று நமக்குத் தெரிந்திருத்தல் எச்சரிக்கை ஆகும். கடந்தகால அறிவு விதை போன்றது. நிகழ்கால அறிவு நிலம் போன்றது. விதையை நிலத்தில் ஊன்றினால் விளையும் விளைவு எதிர்கால அறிவு போன்றது. நல்ல விளைவை ஒருவன் பெற விரும்பினால், விதையையும் நிலத்தையும் ஒருவன் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும். தவறான விதை நல்ல விளைவைத் தராது. எனவே, உற்ற அறிவால் உறவேண்டிய பயனை