பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

119



அடைய விரும்புபவர், அதை நல்ல முறையில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அத்தகையவர்க்கு விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாதது.

இந்த விழிப்புணர்வாகிய எச்சரிக்கை இல்லாமற் போனால் ஒருவர் பல இடர்ப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கையாக இருப்பவர்க்கு இவ்விடர்ப்பாடுகள் ஏற்படுவது இல்லை. அல்லது அவை குறைவாகவே இருக்கும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

(429)

முன்னறிவுடையவர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருப்பார்கள். பொதுவாக மக்கள் எல்லார்க்கும் நிகழ்கால அறிவே அஃதாவது வாழ்க்கை அறிவே இருக்கும். ஒரு சிலர்க்கே கடந்தகால அறிவு இருக்கும். மிகச் சிலர்க்கே எதிர்கால அறிவு இருக்கும். இந்த மூன்று அறிவு நிலைகளும் கூட ஒருவர்க்கே வேறுபட்டதாக இருக்கும். பலரிடமோ இவ்வறிவு உணர்வுகள் பல்வேறுபட்ட நிலைகளில் இருக்கும். அதனாலேயே பலவகையான சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்து கொண்டிருக்கும். இவற்றைத் தீர்வு செய்வதற்கே பலர்க்கு வாழ்க்கை சரியாகப் போய்விடும். எனவேதான் மிகமிகச் சிலரே வாழ்க்கையைத் தாங்கள் எண்ணியபடி பயனுடையதாகச் செய்து கொள்ள முடிகிறது.

3. முன்னறிவே அறிவு

முன்னறிவுடைமையே சிறப்பான அறிவாகும். மிகப் பலருக்கு இச்சிறப்பறிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு கிடைக்கும் அறிவுநிலைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் தாங்கள் பெற்ற கடந்தகால அறிவை வைத்துக் கொண்டு, அதனை நிகழ்கால அறிவுடன் பொருத்திக் கண்டு, தங்கள் வாழ்வை இன்னுங் கொஞ்சம் மேம்பட்டதாக அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் மிகமிகச் சிலரே, தாங்கள் பெற்ற கடந்தகால அறிவு, தாங்கள் பெற்ற நிகழ்கால அறிவு, இதனுடன், தாங்கள் பெறவேண்டிய எதிர்கால அறிவு, இவற்றுடன், தாங்கள் பெற வேண்டிய எதிர்கால அறிவை ஆராய்ந்துணர்ந்து அறிவியல் சார்ந்த சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து, பயனும் பெருமையும் பெறுகின்றனர். இந்த மூன்று நிலை அறிவை உடையவர்களைத் தாம் அறிவுடையவர்கள் என்று சொல்லலாம். இவர்களே எதிர்வரும் விளைவுகளை அறிந்து