பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

செயலும் செயல் திறனும்



எதிரதாக் காக்கும் அறிவு (429), வருமுன்னர் காக்கும் அறிவு (435), முற்காக்கும் அறிவு (442), ஒவ்வதறியும் அறிவு (472), எண்ணித் துணியும் அறிவு (467), மூத்த அறிவு (411), ஆயும் அறிவு (198, 914, 918, 622, 517, 79) வழக்கறியும் அறிவு 795, ஆராய்ந்த அறிவு (682, 634, 586, 682, 711, 584) என்று பலவாறு விதந்தும் போற்றியும் கூறுவார்.

{gap}}இத்தகைய சிறப்பான அறிவியலறிவே, உலகின் அனைத்துத் தொழில்களுக்கும் காரணமாகி நின்று, இன்பத்தையும் பயனையும் தருகின்றது. எந்தச் செயலை அல்லது வினையைச் செய்பவரும் இந்த அறிவுநிலை வளர்ச்சி பெறப்பெறத்தான், அவர் அதில் சிறப்புற இயங்குதல் இயலும் இல்லெனில் அவர் அதில் சிறப்புற இயலாததுடன், இழுக்கையும் இழப்பையும்கூட எய்துவது திண்ணம்.

எனவே, ஒரு செயலில் ஈடுபட விரும்புவார், அதற்குரிய பொருள் முதலிய கருவிகளை அறிந்து அவற்றைத் தேடிக் கொள்வதைப் போலவே, தாம் செய்யப் புகும் தொழிலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் மிகவும் இன்றியமையாத விழிப்புணர்வாகும். கருவிகளை அறிந்து கொள்ளுதலும் ஒரு முன்னுணர்வுதான். அதுபோல் தமக்குரிய செயலைச் செய்யப் புகுவதும் ஒரு முன்னுணர்வாலேயே நடைபெறுதல் வேண்டும். இம்முன்னுணர்வே முன்னெச்சரிக்கையாக வளர்கிறது.

5. உள்ள உணர்வும், அறிவுணர்வும்

பெரும்பாலும் உணர்வு உள்ளத்தினது; அஃது அறிவுணர்வாக வளர்ச்சியடையும் பொழுதுதான் அதனால் பயன் கிடைக்க முடியும். மேலும் உள்ள உணர்வு உயிர்த்தொடர்புடையது; அறிவுணர்வே பொருள் தொடர்புடையது. முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு அறிவுணர்வே பெரிதும் வேண்டும். இந்த இரண்டு நிலைகளையும் விளக்குவதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பயன்படுத்துவோம்.

திருமணமாகாத பெண் ஒருத்தி ஒருவனைக் கண்டு, இவன்தான் நம் கணவனாவதற்கு உரியவன் என்று எண்ணுவாளானால், அது முற்றும் உள்ள உணர்வின்பால் படுவது ஆகும். இது பெரும்பாலும் உயிர்த்தொடர்பால் அறியத்தகும் உள்ளுணர்வாகும். அதன்பின் அவள், அவனைப் பற்றி மேலும் அறிய விரும்பி, அவன் யார், எந்த ஊர், எந்தக் கல்வி கற்றவன், என்ன பொருளேந்துகளைப் படைத்தவன், என்ன அளவில் துணிவுள்ளவன் என்பன பற்றிய அறிய விரும்புவாளானால், அவ்வுணர்வு அறிவின்பால் படுவதாகும்.