பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

127



5. இது வந்தால் இது : ஒரு செயலுக்கிடையில் நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள் வரலாம். அப்படி வருகிற பொழுது, நாம் முனைப்பாகச் செய்து கொண்டிருக்கும் இன்றியமையாத ஒரு பணி தடைப்படலாம். அந்த நிலையில் அப்பணி தடைப்படாத வண்ணம், இடையில் வந்த தடைநிலையினை அகற்றும்வரையில் வேறு ஒரு முறையில் அச்செயலை ஈடேற்றிக் கொள்ளத்தக்க வகையில் உள்ள உணர்வு இது.

மின்சாரம் தடைப்பட நேரும்பொழுது, காற்றுக்காக விசிறியையும், விளக்குக்காக மெழுகுத் திரியையும், மின் அடுப்புக்காக மண்ணெய் அடுப்பையும், மண்ணெய் அடுப்புக்காகக் கரி அடுப்பையும் அணியப்படுத்தி வைத்திருக்கும் உணர்வு இது.

இவ்வுணர்வு எச்சரிக்கை உணர்வின் ஐந்தாம் படிநிலை உணர்வாகும்.

6. இதுவே இது: எண்ணியிருக்கும் பணிக்கு ஏற்ற கருவி கிடைக்காதபொழுது, அதே பணியைச் செய்யும் வேறு ஒரு கருவியால் அதே பணியைச் செய்து கொள்ளும் உத்தி உணர்வு இது.

திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற ஆணி முடுக்கி இல்லாதபொழுது, அகலமான நுனியுள்ள வேறு கத்தியையோ, ஓர் இரும்புக் கருவியையோ அக்கருவி போலவே பயன்படுத்தி அப்பணியைச் செய்து முடிக்கும் உத்தி இதுவாகும்.

எனவே இங்கு கூறப்பெற்ற ஆறு உத்தி உணர்வுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு கூறுகளாகும் என்று அறிக.

8. எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள்

நாம் செய்யப் புகும் வினைகளில் பல எச்சரிக்கையின்மையினாலேயே பயனற்று விடுகின்றன. சிறு சிறு செயல்களிளெல்லாம் முன் எச்சரிக்கை மிகவும் தேவைப்படுகிறது.

பாலை வாங்குமுன், ஏனம் நன்றாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதும், தீப்பெட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, ஈரமில்லாத இடமாகவும், கவனந் தப்பாமல் உடனே எடுக்கக் கூடிய இடமாகவும் பார்த்து வைப்பதும், ஊருக்குப் போகையில், நமக்கு ஆகும் செலவுகளை எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டுத் தேவையான பணத்தை எடுத்துச் செல்வதும், உடலின் கூறுபாடுகளையும் தேவைகளையும் எண்ணி, அதற்குரிய வகையில், நோய் வராமல் இருக்கும் பொருட்டுப் பொருந்துகின்ற உணவை உண்பதும், வண்டி நின்றபின் ஏறுவதும் இறங்குவதும், வளாவி வைக்கப் பெற்றுள்ள வெந்நீரைத் தொட்டுப்