பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

செயலும் செயல் திறனும்



பார்த்து அதன் பின்னர் மேலுக்கு ஊற்றிக் கொள்வதும், பூட்டைப் பூட்டியபின் ஒன்றுக்கு இருமுறை இழுத்துப் பார்த்துச் சரியாகப் பூட்டியிருக் கின்றோமா என்று உறுதி செய்து கொள்வதும், கொடுக்கப் பெறுகின்ற சில்லறையும் உருபாத்தாள்களும் சரியாக உள்ளனவா என்றும், ஒட்டை விழாமல் கிழியாமல் இருக்கின்றனவா என்றும் நோட்டம் விடுவதும், மழைக் காலங்களில் மழை பெய்யாதிருப்பினும் வெளியே செல்கையில் குடையையெடுத்துக் கொண்டு செல்வதும், படைப்பதற்கு முன் சமைத்து வைத்த பண்டங்களுக்கு உப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதும், படைக்கின்ற இலையில் முன் கூட்டியே உப்பைக் கொஞ்சம் வைப்பதும், படித்துக் கொண்டிருக்கும் பொத்தகங்களுக்கிடையில் அடையாளத் தாள் வைப்பதும், பெட்டிகளில் பூச்சிக் குண்டுகளை இட்டு வைப்பதும், எச்சரிக்கை உணர்வுகளே.

இன்னுஞ் சொன்னால் ஆறுகளில் அணைகள் கட்டுவதும், தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் வேலிகள் போடுவதும், பணத்தை வைப்பகங்களில் இட்டு வைப்பதும், உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பதும், கையில் கடிகாரம் கட்டிக் கொள்வதும், மின்சார ஆய்வுக் கருவியை வைத்திருப்பதும் முன்னெச்சரிக்கைக்கான செயல்களே ஆகும், எச்சரிக்கையே வாழ்க்கையாகப் போய்விட்ட தன்மையாலேயே சில பொருள்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.

9. எச்சரிக்கையே கண்டுபிடிப்புகளாகின

குளிர்பதனப் பெட்டிகள், கத்திகள், கரண்டிகள், சூடாக்கிகள், எடைப்பொறிகள், அளவுமானிகள், படிகள் கால் மிதிகள், பூட்டுகள், சட்டைப்பைகள், பேழைகள், செருப்புகள், அழைப்பு மணிகள், இடிதாங்கிகள், நகம் (உகிர்) வெட்டிகள், சில மருந்துகள், கோப்புகள், விளக்குகள், மெழுகுத்திரிகள் எழுதுச்சுவடிகள், கத்தரிக்கோல்கள், துமுக்கிகள் முதலிய நூற்றுக்கணக்கான பொருள்கள் மாந்தருடைய எச்சரிக்கை உணர்வால் கண்டுபிடிக்கப் பெற்ற பொருள்களே.

எனவே, எச்சரிக்கை உணர்வு மாந்தனின் மிக இன்றியமையாத உணர்வாகப் போய்விட்டது. இவ்வுணர்வு வளர வளர எதிர்வருந்துன்பங்கள் நமக்கு இல்லாமல் போகின்றன. முன்னர் கூறப்பெற்ற அறுவகை எச்சரிக்கை உணர்வுகளையும் நுணுகி ஆய்ந்து ஒருவன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டால், கட்டாயம் நம் செயற்பாடுகள் அத்தனையும் செப்பமாக அமையும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

10. கண்காணிப்பு உணர்வு

இனி, எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தோன்றும்