பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

129



இணையான உணர்வு கண்காணிப்பு உணர்வாகும். இவ்விரண்டு உணர்வுகளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து கொண்டுள்ள இணை உணர்வுகள். இவ்விரண்டும் ஒன்றினால் ஒன்று சிறந்து விளங்குவதாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டுமானால் கண்காணிப்பு இருக்க வேண்டும். ஒரு பொருளோ செயலோ கெட்டுவிடக் கூடாது என்றால், அவற்றின்மேல் கருத்து வைத்துக் கண்காணிப்பாக இருத்தல் மிகவும் இன்றியமையாதது. முன்னதாகக் காக்காமல், பின்னதாக வரும் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.

முன்னுற காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரக்கி விடும்.

(535)

என்னும் அறிவுமொழி, பிழைகள் நேர்ந்துவிடாதவாறு நாம் மிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை மிக வலிவாக வலியுறுத்துக் காட்டும் அழுந்தியுணர்ந்த மெய்ம் மொழியாகும்.

எச்சரிக்கை உணர்வும் கண்காணிப்பு உணர்வும் ஆகிய இவ்விரண்டு உணர்வுகள் மட்டும் இருந்தாலே ஒருவன் விரைவில் முன்னேறி விடுவது திண்ணம். இருளைப் போக்க நாம் விளக்கைக் கொளுத்தினால் மட்டும் போதாது. கொளுத்தப்பட்ட அவ்விளக்கு காற்றில் அணையாமல் காக்கப் பெறுதலும் வேண்டும். எனவே விளக்குக்குக் கண்ணாடிக் குமிழ் ஒன்றைப் பொருத்திக் கொள்கிறோம். இங்கு விளக்கு எச்சரிக்கை உணர்வையும், குமிழ் கண்காணிப்பு உணர்வையும் நன்கு புலப்படுத்துகின்ற எடுத்துக் காட்டுகளாம்.

11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது

தொழில் ஒன்றைத் தொடங்கிய ஒருவன், தொழிலுக்கு அடிப்படையாக உள்ள பொருளைக் கண்காணிக்கவும் செய்தல் வேண்டும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

(1038)

என்னும் உழவு அதிகாரத்தில் வரும் குறள்மொழியுள் கூறப்பெற்ற, ஏர் உழுதலும், எருவிடுதலும், களையெடுத்தலும், நீர்ப்பாய்ச்சுதலும் பயிரின் நல்ல விளைவுக்குற்ற எச்சரிக்கை உணர்வுகளாகும். அதை விலங்குகளிடமும், பறவைகளிடமும், திருடர்களிடமும் இருந்து காப்பது கண்காணிப்பு உணர்வாகும். இதில் எச்சரிக்கை உணர்வைவிடக் கண்காணிப்பு உணர்வு மிகச் சிறந்தது; தேவையானது என்று கூறப்பெறுகிறது. இதனை அடுத்து வரும் இன்னொரு குறளிலும்