பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

133



சொல்லுவார் ஆசான். பிறதுணைகள் ஒரு வேளை இடையில், பூசல் கொண்டு, இகல் விளைவித்துப் பகையாக மாறினும் மாறலாம் என்பதால் துணைகள் வேண்டா என்பார். மனவேறுபாடு கொள்ளாத துணை கிடைத்தற்கு அரிது என்னும் உலகியற் குறிப்பு இவ்வாய்மை மொழியுள் உணர்வாய் அடங்கியுள்ளதை உய்த்துணர்க.

2. அஞ்சாமை வேண்டும்

அஞ்சாமை, ஒரு செந்துணிவை மனத்திற்கும் அறிவிற்கும் வழங்கிக் கொண்டே இருக்கும் ஒர் ஊக்க உணர்வு. இது, குழந்தைப் பருவத்தில் மாந்தரிடம் விளங்கித் தோன்றிப் பின் படிப்படியாக, பல்வேறு வகைப்பட்ட அகப் புறச்சூழல்களால் பலரிடத்து அமுங்கியும், சிலரிடத்து எழுந்தும் இயலும் ஓர் உள்ளுணர்வாகும். இது, பிறப்பியல், வாழ்வியல், உடலியல், அறிவியல், சூழ்வியல் ஆகிய அகப்புறக் காரணங்களால் அவ்வாறு வளர்ந்தும் வளராமலும் இருக்கும். இது முற்றுற வளர்ந்தால் பல வினைகளுக்கு ஆக்கமாகவும், முற்றுறத் தளர்ந்தால், பல அழிவுகளுக்கு ஊக்கமாகவும் அமைந்துவிடும். எனவே, அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகிய அஞ்சாமை என்னும் உணர்வே உயிர்க்கு அனைத்து வளர்ச்சிகளுக்கும் காரணமாக அமைகிறது.

அஞ்சாமை உணர்வு அறிவொடு கலக்கும் பொழுது ஒர் ஆக்கத் துணிவையும், அறியாமையுடன் கலக்கும் பொழுது ஒரு கொடுமை விளைவையும் மாந்தர்க்குத் தரும் அஞ்சாமை உணர்வு துளியும் அற்ற ஒருவன் வெறும் கோழையாகவே இருப்பான். இக்கோழைமை உணர்வு ஒருவனிடம் நன்கு வளர்ந்துவிட்டால், அவன் அறிவுள்ளவனாக இருந்தாலும் எதிலும் முன்னேறி விடமுடியாது. ஏதோ, தனக்குக் கிடைத்த ஒரு தனிப்பட்ட நிலையிலேயே, நிலையாகத் தங்கிவிடுவான். அந்நிலையினின்று அவனால் மேம்பட்டு வளரவே இயலாது. வளர்ந் தாலும், கிளையற்ற மரம்போல், தனித்தே நின்று இயங்குவான். அவனால் பிறர்க்கு ஒர் எள்ளின் மூக்கத் துணையும் உதவியாக இருத்தல் இயலாது.

அஞ்சாமை உணர்வுள்ள ஒருவன் அறிவற்றவனாக இருப்பினும் வீரனாக மலர்ச்சியுறுவான். அவனால் நல்ல பல ஆக்கமான வினைகள் கூட நடந்து விடலாம். அவ்வினைகளின் பயன், அவனைச் சார்ர்த பலருக்கும் கிடைக்கலாம். ஆனால் அஞ்சாமை அறிவொடு இனையும் பொழுது பல்வேறு வகையான செயல்களுக்கு அஃது ஊற்றமாக அமைந்து விடும். எனவே, அஞ்சாமையில்லாத அறிவை விட, அஞ்சாமை மட்டுமே உள்ள வீரம், ஒரளவு பொதுப்பயனுக்கு பொதுச் செயல்களுக்கு நலந்தருவதாகும். இவ்வுணர்வு நிலைகளைக் கீழ்வரும் சமனியங்களாக வகுத்துச் சொல்லலாம்.