பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

செயலும் செயல் திறனும்


அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்
அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்
அஞ்சாமை + அறியாமை > கொடுமை
அஞ்சாமை + அறிவு > செயலாண்மை

எனவே, உலகில் ஒரு செயலுக்கு அஞ்சாமை தான் மூலமுதல். அஃது ஒருவனிடம் இயற்கையாகவே அமைந்துவிடுமானால், அவன் எவ்வகையானும் இவ்வுலகில் வேறு பொருள்களைத் துணையாக்கிக் கொண்டு, தான் எண்ணிய செயற்பாடுகளைக் கட்டாயம் செய்வான். அதனால் பிறர்க்கு நன்மையுடையவனாகவும் இருப்பான். அஞ்சாமை அறிவுடன் சேர்ந்து இயங்கவில்லையானால், முரட்டுத் துணிவாகிக் கொடுமை உணர்வாக வளர்ந்துவிடும். அசைவிலாத ஊக்கமே அஞ்சாமையின் விளைவுதான். ஒருவனிடம் அறிவு கலந்த அஞ்சாமை இருந்தால்தான் ஊக்கம் தோன்றும். அந்த ஊக்கம் அஞ்சாமையொடு கலந்தே அசைவின்மையைத் தரும். அசைவின்மை என்பது நடுக்கமின்மை. ஒன்றை நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் வெளிப்படுத்தியதைச் செய்யவும் அஞ்சாமை உதவுகிறது. மேலும் அஞ்சாமை, மனவுணர்வுடன் கலக்கின்ற பொழுதுதான் உண்மையுணர்வைத் தோற்றுவிக்கிறது. உண்மையுணர்வு நேர்மையைத் தோற்றுவிக்கிறது. மற்றபடி அஞ்சாமையற்ற உள்ளம் உண்மையை உணரு மானாலும் கூட அது செயலுக்குரிய ஊக்கத்தைத் தோற்றுவிக்காது.

3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை

ஒரு செயலைத் தொடங்குவதற்கும் தொடங்கிய செயலுக்கிடையில் பல இடர்ப்பாடுகள் வந்தாலும் மேன்மேலும் அதைத் தொடர்ந்து செய்வதற்கும் அஞ்சாமை அடிப்படை உணர்வாகும். அஞ்சாமை உணர்வு ஒருவனிடம் நன்கு கால் கொண்டிருந்தால், அது மன ஊக்கத்திற்கு உறுதுணையாக நின்று, எத்தகைய துன்பத்திலும் அதைத் தளரவிடாமல் காத்துக் கொள்ளும், துன்பம் வரும் பொழுது துவண்டு விடுகிற உள்ளம், மேற்கொண்டு துணிவாக இயங்குவதற்கு அவனை. விடாது. எனவேதான் 'இடுக்கண் வருங்கால் நகுக' (621) என்றார் பேரறிஞர்.

ஒருவன் துன்பத்தில்தான் துவண்டு போகின்றான். சிலர். ஏதானுமொரு சிறுதுன்பம் வந்தாலும் தாங்குவதில்லை. பெருந்துன்பம் வருமானால், அனைத்து நிலைகளும் இல்லாமற் போய்விட்டது போல் அப்படியே இடிந்து போய், தலைமேல் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். அக்கால், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் அவர்களின் துன்பத்தை எடுத்துப் பேசி அதைப் பெரிதுபடுத்தி இல்லாத கற்பனையெல்லாம் பண்ணி அவன் துன்பத்தில்