பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

135



ஏதோ தாங்கள் பங்கு கொள்பவர்களைப் போல், பலவாறு கூறி, அவனைக் கோழையாக்கி விடுகின்றனர் பின்னர், அக்கோழைமை உணர்வினின்று அவன் மீண்டெழுவதற்குள், அவன் மேற்கொண்ட வினை தொய்வடைந்து விடுகிறது. அதன் பின் மேலும் அவ்வினையைக் கட்டியெடுப்பதற்குள் நீண்டகாலம், நெடிய முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன்

நமக்கு வினையின்கண் வரும் துன்பங்கள், அல்லது இடையூறுகளில் எல்லாம் பொருள் முடையும் கருவிமுடையுந்தாம் பேரளவினவாக இருக்கும். ஆள்களால் வரும் இடையூறுகள் சில செயல்களைக் குறைவுப்படுத்திவிடும். செயல்நிலைகளில் வரும் பொருள்முடை, பொருள் கிடைக்குங்கால் நீங்கிவிடும். துன்பம் கருவிகளாலும் ஆள்களாலும் வருமானால், அவற்றையும் முறைப்பட்ட தோதுக்களால் தவிர்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் இடர்ப்பாடுகள் என்பன நம் ஊக்கத்தை மிகுதிப்படுத்தும் காரணங்களாகவே அமைகின்றன. அவை சிதறியிருக்கும் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. நம்மை நாம் மேற்கொண்ட செயலினின்று நெகிழவிடாமல், ஈடுபட வைக்கின்றன. மனத்தையும் அறிவையும் ஊக்கப்படுத்தி, நம்மை மேலும் நம் செயலில் தெளிவடையச் செய்வதற்காக இடர்ப்பாடுகள் நமக்கு உதவுகின்றன.

துன்பமெனும் ஆசிரியன் துன்னப் பயிற்றுவிக்கும்

இன்பமெனும் கல்விக்கு ஈடில்லை என்பது உலகியல் நூறு.


5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது மேலும், செயல்படும் இடங்களில் எல்லாமே காளைபோல் உழைப்பும் ஊக்கமும் உடையவனாகச் செயல்படுபவனை, அவனுக்கு வந்துறும் துன்பங்கள் ஏதும் செய்யா என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

(624)

இன்னோர் உண்மையையும் நாம் உணரும்படி திருக்குறள் நமக்குத் தெளிவிக்கிறது. செயலை விரும்பியவன் எப்பொழுதும் இன்பத்தையே எதிர்பார்த்திருத்தல் கூடாது. துன்பத்தை அவன் எதிர்கொள்ள எப்பொழுதும் அணியமாக இருத்தல் வேண்டும். இன்பத்தை மட்டும் விரும்பாமல், துன்பத்தையும் எதிர்கொண்டிருப்பவன் எந்த இடர்ப்பாட்டையும் எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியும்.