பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

செயலும் செயல் திறனும்அடிப்படை உடல்தான் செயல்; உடல்தான் அறிவுமுதல்; உடல்தான் அன்பு முதல். உடல் தான் அனைத்தும்.

3. உடல்தானம் மூலமுதல் (First Capital)

எனவே, இவ்வுலகின் அனைத்து நிலைகளுக்கும் மூல முதலாக உள்ள உடலை நாம் பேணிக் கொள்ள வில்லையானால், பழுதுபடாமல் வைத்திருக்க வில்லையானால், நாம் எத்துணை அறிவுள்ளவராக இருந்தாலும், அன்புள்ளவராக இருந்தாலும், பணம் உள்ளவராக இருந்தாலும், செல்வம் உள்ளவராக இருந்தாலும், என்ன பதவியில் இருப்பவராக இருந்தாலும், எந்த இடத்தில் வாழ்பவராக இருந்தாலும் நாம் பயனற்றவர்களே! இவ்வுலகிற்கு வேண்டாதவர்களே!

இத்தகைய அரிய, தேவையான, இன்றியமையாத, அனைத்துக்கும் அடிப்படையான உடலை நாம் எளிதாக நினைத்துவிடுகிறோம். இன்னுஞ் சொல்வதானால், நம்மில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் உடலைப் பற்றியே கவலைப்படாதவர்களாக, கருத்தில்லாதவர்களாக, அக்கறையற்றவர்களாக இருந்து வருகிறோம். ஓர் அரிய கருவூலத்தைக் காப்பது போல், எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்குக் கிடைத்த உடலைத்தான் நாம் முதலில் காத்து வருதல் வேண்டும். அதனால்தான் திருமூலர் என்னும் மிகப்பெரும் மெய்ப்பொருள் அறிஞர், உடலைப்பற்றித் தம் அருமைக்கருமையான திருமந்திரம் என்னும் நூலில், கீழ்வருமாறு கூறுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தபின்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே!

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்!
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்தோம்புகின் றேனே!

உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடுயிரிடை நடப்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே

இவ்வருமையான பாடல்கள் உடம்புதான் அனைத்துக்கும் அடிப்படையாக நின்று இயங்குவது என்றும், அதனால், அதனை மிகக் கருத்துடன் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுவதை நன்கு உணர்ந்து பார்த்தல் வேண்டும்.