பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

செயலும் செயல் திறனும்



இருந்தால்தான் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். உடலும் உள்ளமும் அறிவும் அக அளவாக நின்று நமக்கும், புற அளவாக நின்று பிறர்க்கும் பயன்படுகின்றன. உடல்நலம் இல்லாதபொழுது, மனம் ஊக்கம் தளர்கிறது. மன ஊக்கம் தளர்ந்தால், உலகச் செயல்கள் எதிலும் நாட்டம் குறைகிறது. முயற்சி இல்லாமல் போகிறது. மன ஊக்கம் குறையக் குறைய, உள்ள வலிவு குறைகிறது. உள்ள வலிவற்றவன், தன் உடலைப் பேணவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் இயலாமல் போகிறான். நம்மில் சிலர் எந்தச் செயலிலும் நாட்டம் குறைந்திருப்பதற்கு உள்ளம் நலமில்லாமல், வலிவில்லாமல் ஊக்கம் குறைந்திருப்பதே கரணியம், உடல் நலம் குறைந்தவன், எந்தவொரு செயலுக்கும் பிறர் உதவியை நாடுகின்றான். பிறரை நம்ப வேண்டியவனாகப் போகிறான். உள்ள ஊக்கம் குறைந்தவன் தன்னம்பிக்கை குறைகின்றான். தன்னம்பிக்கைக் குறைவு தன்னுக்கத்தையும் தன்னறிவையும் கெடுக்கிறது.

7. உடல் கெட அனைத்தும் கெடும்

உடல் நலமும் அதால் உள்ள நலமும் குறைந்து காணப்படுகின்றவன் பிறரை ஐயுறுகின்றான். அவர்கள்மேல் எரிச்சலுறுகின்றான்; பிறரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு ஐயுறவை உண்டாக்கி, எரிச்சலைத் தந்து, வெறுப்பை வளர்த்துப் பொறாமையைத் துரண்டிப் பகை கொள்ளச் செய்து, மனத்தைப் பலவாறாக இடர்ப்பாடுகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்குகிறது. அவன் எப்பொழுதும் பிறரின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருக்கிறான். முடிந்த அளவில் அவற்றில் குற்றம் காணுகிறான். அவற்றைப் பொறாமையால் எதிர்க்கவும் முனைகிறான். பொறாமை மிகுதியால், பிறரிடம் தனக்கு வேண்டாதவனைக் குறை கூறுகிறான். நல்லறிவுத் திறம் அவனிடம் குறைகிறது. நற்சிந்தனை குறைகிறது. எனவே, அவன் அறிவுத் திரிபு கொள்கிறான். திரிந்த அறிவு எந்தச் செயலிலும் நாட்டங் கொள்ளச் செய்யாமல் அவனைத் தடுக்கிறது. உடலால் உள்ளமும், உள்ளத்தால் அறிவும், அறிவால் செயலும் படிப்படியாகக் கேடுற்றுக் கொண்டே போகின்றன. இது தொடர்வினைபோல், அவன் உடல் நலமுறுகிறவரை நீண்டு கொண்டே போகிறது. தான் செய்ய இயலாத நிலை, பிறர் செயல் நிலைகளால் எரிச்சலையும், பொறாமையையும், பகையையும் தொடர்ந்து வளர்க்கவே, அவன் யாருக்கும் பயனற்றவனாகவே, போகின்றான். இறுதிவரை அவன் ஒரு மன நோயாளியாகவே அல்லலுறுகின்றான்.

உடல்நலமே அனைத்துச் செயலுக்கும் மூலகாரணமாக நிற்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை. எனவே, உடல் நலமின்மையே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.