பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

151போன்றவற்றையும், கந்தகச் சாரம் அற்றுப்போமாயின் தூதுவளை, அகத்தி முதலியவற்றையும் பொன்சாரம் அற்றுப்போமாயின், பொன்னாங்காணி முதலியவற்றையும் மருத்துவ நூல்வழித் தெரிந்து தேர்ந்து விரும்பி உண்ணவேண்டும் என்க.

இனி, மேலே கூறபெற்ற உணவு முறைகளை அறிந்து அவரவர் தம் அகவை, உழைப்பளவு, காலநிலை, இடநிலை, சுவை நிலை, பொருள் நிலை முதலியவற்றுக்குத் தக்கவாறான அளவு முறைகளுடன் பின்பற்றுவது, உடல் என்றும் நல்லியக்கத்துடனும் திறத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக அமையும் என்க.

3. போதுமான ஓய்வு

இனி, உடல் உழைத்தபின் அதற்குக் கட்டாயம் ஓய்வு தேவையானது. ஓய்வென்பது உழைப்புக்கும், உழைப்புக்கும் உள்ள இடைவெளி இரண்டு பொருள்களுக்கும் உள்ள இடைவெளி இடம் என்றும் இரண்டும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி காலம் என்றும், இரண்டு மாறுதல்களுக்கும் உள்ள இடைவெளி பொருள் என்றும் எவ்வாறு கணிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி இயக்கமற்றநிலை அஃதாவது ஓய்வு என்று கணிக்கப் பெறுகின்றது. உடலானது இயக்கம், அமைதி இயக்கம், அமைதி என்று மாறி மாறிச் செயல்படுகிறது. இயங்கும் நிலையால் அது வலிவும் வளர்ச்சியும், பயனும் பெறுகிறது. இயக்கமமற்ற அமைதி நிலையால், அஃது உயிர்ப்பும், ஊக்கமும், இன்பமும் பெறுகிறது. எனவே, ஓர் உடலுக்கு உழைப்பு எவ்வளவு தேவையோ, அவ்வளவு ஓய்வும் தேவை.

ஓய்வு என்பது உடலின் பழுதுபார்ப்பு முயற்சி; புத்துயிர்ப்பு நிலை; புத்தாக்கத்தேவை. எனவே ஓய்வு ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் இருக்கவேண்டிய கட்டாய நிலைப்பாடு. இதுபற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஓய்வு என்பது ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் உடலுக்குத் தேவைப்படும் அமைதி, உடல் மீண்டும் செயலில் ஈடுபடத் தன்னை அணியப்படுத்திக் கொள்ளும் முயற்சி அது உடல் உழைக்க உழைக்க, ஆற்றலை இழக்கிறது. அந்த ஆற்றலை உணவால் மீண்டும் உடலுக்குத் தருகிறோம். உணவு உண்ட உடனேயே அது செரித்து ஆற்றலாக மாறிவிடாது. அவ்வுணவு படிப்படியாகச் செரித்துக் குருதியாக மாறி உடலின் பல பகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்த பின்தான் உடலுறுப்புகள் மீண்டும் இயங்குவதற்குரிய ஆற்றல் பெறுகின்றன. எனவே அதுவரை உடல் சிறிது நேரம் ஓய்வாக இருக்க வேண்டுவது தேவையாகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் சிறு சிறு ஓய்வு பெற்று இறுதியாக, நாள் முடிவில் ஒரு நீண்ட ஓய்வை உடல் எடுத்துக் கொள்ளுகிறது.