பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

செயலும் செயல் திறனும்



செயல்களில் ஈடுபடுவோர்க்கு, நாளடைவில் உடலில் உள்ள பிற உறுப்புகள் வலிமை குன்றும் அறிவு வளர்ந்தால் மட்டும் போதுமா? உடலும் வலிமை குன்றாமல் இருந்தால்தானே, அறிவுப் பணியையும் நாம் தொடர்ந்தும், திறம்படவும் செய்ய முடியும். எனவே, மென்மையான செயல் செய்பவர்கள் கட்டாயம் அதிகாலைப் பொழுதுகளில், உடல் முழுவதையும் இயக்க வல்ல உடற்பயிற்சிகளில் கட்டாயம் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், அவர்களின் உடல் அவர்களின் பணிக்கே, நாளடைவில் ஒத்துழைக்காமல் போய்விடும் என்பதை முன்னெச்சரிக்கையாகக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இதில், இன்னொன்றையும் நாம் கவனித்தல் மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சி என்று நாம் சொல்லும் பொழுது, மல்லர்கள், கடும் களரிப் பயிற்சியாளர்கள் (Gymnasts) போல், கடும் பயிற்சிகளை (Gymnastics) நாம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தேவையில்லை. அதே துறையில் சிறந்து விளங்க வேண்டும், போட்டிகளில் ஈடுபட்டுப் பரிசுகளைப் பெறவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஈடுபட விரும்புவர்களே அவ்வாறு பல கடும் பயிற்சி முறைகளில் ஆர்வம் செலுத்தலாம்; கவனம் கொள்ளலாம்; காலையிலும் மாலையிலும் இதே வேலையாக உடற்பயிற்சிகளுல் ஈடுபடலாம். ஆனால் பொதுவான பிற வாழ்வியல் செயற்பாடுகளில் ஈடுபடும் பிறரும் அவ்வாறு கடுமையான பயிற்சிகளைச் செய்துதான் உடலை வலிவுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது அகத்தியமன்று. அத்தகையவர்கள், மென்மையான உடற்பயிற்சிகளை ஒவ்வொருநாள் காலையிலும், தவறாமல், தொடர்ந்து ஒர் அரை மணி நேரமோ, அதுவும் செய்ய நேரமில்லாதவர்கள் இருபது நிமையமோ (அதற்கும் குறைவான நேரத்தில் செய்யும் உடற்பயிற்சிகளால் அவ்வளவு பயன் ஏற்பட்டு விடாது. எனவே, அந்த அளவு நேரமாகிலும்) உடற்பயிற்சி செய்தால் போதுமானது. இயன்றால் மாலையிலும் அதே நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கலாம். ஆனால் இதை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிப்பது, உடல் நலத்தைப் பேணிக் காத்திடவும், உடலைச் சீராக நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும்.

பெரும்பாலும் இளமைக் காலத்திலிருந்தே, அல்லது தாம் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடும் காலத்திலிருந்தே இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. அத்தகையவர்களுக்கு, உடல் தொடர்ந்து நலமுடனும் உறுதியுடனும் இருப்பது உறுதி, அவர்களுக்குத் தலைவலி வயிற்றுத் தொடர்பான செரியாமை, வளித்தொல்லை, தொந்தி சரிதல், குடலிறக்கம், சிறுநீர்க்கோளாறு, மலச்சிக்கல் முதலியனவும், உடல் கொழுப்பேறி சதைபோடுதல், கைகால் மூட்டுகளில் வலியேற்படுதல், இடுப்பு வலித்தல், முதுகு வலித்தல், தோள் வலித்தல், கூன் போடுதல்,