பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

155



விரைந்து முதுமையடைதல், உடல் தளர்ச்சி, சோர்வடைதல், அடிக்கடி களைப்புறுதல் முதலிய உடல் கோளாறுகள், நோய்கள் ஆகியவும் கட்டாயம் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. உறுதியாக இவை வரவே வரா. உடல் நோயின்றி இருந்தால்தான் எடுத்த செயலைத் திறம்படவும், ஊக்கத்துடன் விடாமலும் செய்ய இயலும் இல்லெனில், உடல் நலிவால் செயலும் கெடும்; செயல் திறனும் குன்றும் வாழ்வும் கெட்டுப்போய், மனமும் மகிழ்வை இழக்கும்; இனி, அறிவு நலமும் குறைந்துவிடும். எவ்வளவு பணம் இருந்தாலும், உடல் நலமில்லாத நிலையை எய்தியவனால் ஒன்றுமே செய்ய இயலாது. அவன் பிறர் நலத்தோடு வாழ்வதைப் பார்த்துப் பொருமிக் கொண்டே இருப்பான்; தன்னையே உள்ளுர வெறுப்பான், நாளடைவில் அவன் ஒரு மனநோயாளியாகி, நடைப்பிணம் போல் வாழ்ந்து சாக வேண்டியதுதான். இந்த நிலையில் அவன் பல செயல்களைத் தெரிந்து கொண்டிருந்தாலும் எவ்வாறு அவற்றைச் செய்ய முடியும்? அந்த நிலையை அடைந்த சிலர், தம்மிடம் உள்ள பெரும் பணத்தால், பிறரை வைத்தேனும், அவர்களை ஏவியேனும், தாம் எண்ணிய செயல்களைச் செய்து விடமுடியும் என்று நம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உடல் நலமில்லாத தொழில் முதல் உள்ளவர்களை, மற்றவர்கள் எளிதில் ஏமாற்றவே செய்வர். ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களையும் அத்தகைய முதலாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராமல் செய்து விடுவார்கள்.

நோயுள்ள ஒருவன் முதலில் தன் உடல் நலத்தை இழக்கிறான். அதன்பின் தன் மன உறுதியை இழக்கிறான்; மனவுறுதியிழந்தவுடன், தன்னம்பிக்கை போய்விடுகிறது. பிறரையே நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்; பிறரை நம்பி ஒரு செயலைத் தொடங்குபவன், தன்னறிவை இழக்கிறான்; எனவே, பிறர்மேல் ஐயப்பாட்டையும் அவநம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுகிறான். உடனே குறுக்கு வழிகளில் பயன்கான விரும்புகிறான். அதற்காகக் குறுகிய மனப்பாங்கு உள்ள தீயவர்களின் துணையை நாடுகிறான். அவர்களால் அவனுக்கு ஒவ்வொரு நொடியும், நேரமும், நாளும் துன்பமே படர்கிறது.துன்பங்கள் படரப் படர எல்லா நல்லுணர்வுகளும் அவனிடத்தில் அழிந்து விடுகின்றன. அழிந்து விடவே, அவன் கடும் நோய்ப்பட்டு உடலையும் பிறகு உயிரையும் துறந்து விடுகிறான். அதன் பின் அவன் நன்னிலையில் உள்ளபொழுது தேடிய செல்வங்கள், அவனைச் சுற்றியுள்ள சோம்பேறிகளுக்குப் போய் வீணாகிக் கரைந்துவிடுகின்றன. இந்த விரிவான விளைவுப் படிநிலைகளை ஒவ்வொருவரும் மனத்தில் இருத்தி, நம்முடைய அரிய வாழ்க்கையை எவ்வாறு செயற்கரிய செய்து, அதால் வாழ்வாங்கு வாழ்ந்து வசையொழிந்து இசைபெற்று என்றும் நீடுபுகழ் எய்திட, நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும்.