பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

செயலும் செயல் திறனும்



5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல்

இனி, வினைத்திறன் உள்ளவர்கள் வினைகளில் அதிகம் ஈடுபாடு கொள்பவர் ஆகையால், உடல் அடிக்கடி அழுக்கடைவதற்கு இடம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் தம் உடலைச் சுறுசுறுப்புடனும், தூய்மையுடனும், நோயில்லாமலும் வைத்துக் கொள்ளத் தேவை உண்டாகிறது. உடல் தூய்மையுடன் இருந்தால்தான் மனமும் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால்தான் அறிவும் தூய்மையாக இருக்கும்.

உடல் தூய்மையில்லாத ஒருவர் அடிக்கடி உடல் நோயுறுகின்றார். அதனால், மனம் கெடுகிறது. உடல்மேல் நாட்டம் உண்டாகிறது. உடல்மேல் நாட்டம் கொண்டவர் மனவுணர்விலோ, அறிவுணர்விலோ, அவற்றின் வழிச் செயலிலோ நாட்டம் குறைகிறது.

புறந்துாய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

(298)

எனும் வாய்மை மொழியில் புறந்துாய்மை, அகந் துாய்மைக்கு அடிப்படையாகப் பேசப் பெறுதல் காண்க.

புறந்துய்மை என்பது உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நிலையையே வலியுறுத்துகிறது. அது நீரால் அமையும் என்பது. உடலை நாளுக்கு ஒரு முறையாகிலும் முழுவதும் நீர்விட்டுக் கழுவுதலும் மற்று எப்பொழுதும் திறந்தே கிடக்கின்ற புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், முகம், வாய் இவற்றை அவ்வப்பொழுது நீரால் கழுவித் தூய்மை செய்து கொள்வதும் ஆகும். நம்மில் பலர் நாள்தோறும் குளிப்பதில்லை. உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சூடு தணியவும், வியர்வை கழுவப்படவும் நீர்க்குளிப்பு மிகமிகத் தேவை என்று அவர்கள் உணர்வதில்லை. நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்து கொண்டிருப்பது போல், உடலாகிய கருவிப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்யவே வேண்டும். அல்லாக்கால் அஃது அழுக்கடைகிறது; துய்மை கெடுகிறது. நலிவுறுகிறது; தன் இயக்கத்தில் குறைபடுகிறது; அக்கால் நாம் நினைத்த அல்லது எடுத்துக் கொண்ட செயல்களுக்கு அது தடையாக இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்த செயலாளர்கள், தங்கள் உடல்களை எப்பொழுதுமே தூய்மையாக வைத்திருப்பதன் தேவையை இயல்பாகவே உணருகின்றனர்.

பலரும் உடல் தூய்மை என்றால் வெறும் குளித்தல் என்றும், குளித்தல் என்றால் உடலில் நீர் வார்த்துக் கொள்ளுதல் என்றுமே பொதுவாக எண்ணியிருக்கின்றனர். ஆனால், குளித்தலின் இன்றியமையாமையை உணர்ந்திருப்பவர்கள், வெறும் நீர் விட்டுக் கழுவுவதாலேயே உடல் தூய்மையடைந்து விடாது என்று அறிவார்கள்.