பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

செயலும் செயல் திறனும்



பற்பலவாறான கீழுறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை. பலருடைய வியர்வை அவர்கள் கழிவுப் பொருள்களைப் போலவே தீ நாற்றமடிப்பதை மிகப் பலர் உணர்ந்திருக்கலாம். சிலரின் வாய்க்காற்றும் அவ்வாறு அடிப்பது உண்டு.

பலர் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன், வாயை நீர்விட்டுப் பலமுறை கொப்பளித்துத் தூய்மை செய்வதும் முகம் கழுவுவதும், கண்களில் உள்ள மலங்களையும், கசண்டுகளையும் நீர்விட்டு விரலால் தூய்மை செய்து கொள்வதும் இல்லை. இத்தகையவர்கள் அருகில் பிறர் நிற்கவும் அருவருப்பாக இருப்பதை அவர்கள் நினைப்ப தில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை.

இனி, இன்னும் பலர், குளிப்பது எனில் தலையை விட்டு மேலுக்கு மட்டுமே நீர் விட்டுக் கழுவுவது என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு நீர் விடாமல் குளிப்பது என்பதற்குப் பொருளே இல்லை. நாள்தோறும் உடலைக் கழுவுகையில், தலையையும் சேர்த்தே கழுவுதல் வேண்டும். தலையை விட்டுவிட்டு மேலுக்கு மட்டுமே நீர் வார்த்து வருவதன் கெடுதல் தன்மை, உடனே விளங்காது. ஆனாலும் காலப்போக்கில் கண், காது, மூக்கு, தொண்டை, தலை இவற்றுக்கு வரும் பலவகையான நோய்களை வைத்து விளங்கிக் கொள்ளலாம். சிலருடைய தலைமுடியில் நிறைய அழுக்கு மண்டியிருப்பதை, அவர்கள் தலைவாரிக் கொள்ளும் சீப்பைப் பார்த்தாலே விளங்கிவிடும். ஒரு முறை அவர்கள் தூய்மையான புதுச்சீப்பைக் கொண்டு, வாரிப்பார்த்து அறிந்து கொள்ளலாம். தலை அழுக்கடைவதுடன், பிசுக்கும் தீ நாற்றமெடுத்தும், பேனும் ஈரும் குடியிருக்கும் கூடாரமாக அவர்கள் தலை விளங்குவதை அவர்களே தாம் அறிய வேண்டும். இனி, குளிப்பதற்கு வெந்நீரைவிட, தண்ணிரே எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலையிலும் நல்லது. உடல் நலிவு, நோய் வாய்ப்பட்டிருக்கும் பொழுதும், எண்ணெய்க் குளியலின் பொழுதும் வெதுவெதுப்பான நீர் நல்லது.

உடல் தூய்மை என்பது, சிறு பருவம் முதலே அறிந்து கொள்ளப்பெறுவதும், பழக்கப்படுத்திக் கொள்வதுமான ஒன்று. பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நல்ல பழக்கங்களுள் இது மிகவும் முகாமையானது. இவையன்றி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நடைமுறைகள் நிறைய உண்டு அவற்றை வல்லார் வழியாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, இவையெல்லாம் செயலுக்குத் தேவையில்லை என்று கருதிவிடக் கூடாது என்பதாலேயே இவற்றை இவ்வளவு விரிவாக எடுத்து விளக்கவேண்டி வந்தது என்க.

6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்

இனி உடல்துய்மைக்கு அடுத்தபடி செயல்திறம் உடையவர்களுக்கு . நல்லெண்ணம் மிகவும் தேவை. பலர் நல்லெண்ணம் என்பதற்கும்.