பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

159நேர்மையான உணர்வுகளுக்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கின்றனர். நல்லெண்ணம் என்பது, தாம் வாழ்வது போலவே பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதும், நமக்குப் பிறரின் உதவி தேவையாயிருப்பதைப் போலவே, பிறர்க்கும் நம் உதவி தேவைப்படும் என்று கருதுவதும், நம்மிடம் பிறர் இணக்கமான அன்பு காட்டுவதுபோல், நாமும் எல்லாரிடமும் இணக்கமான நட்புணர்வோடு அன்பு காட்டுவதுமே நல்ல எண்ணங்களாகும். நேர்மையான உணர்வுகள் என்பன, அந்நல்லெண்ணங்களைக் கடைப்பிடித்தொழுகுகையில் மேற்கொள்ள வேண்டிய உணர்வுகள். அவை பொய்யாகவும், வஞ்சனையாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் நடவாமை. பிறரின் சிறு முயற்சியையும் பெரிதும் பாராட்டல் முதலியன. ஆனால் இவற்றிற்கும் கூட நல்லெண்ணம்தான் காரணம்.

ஒரு செயலைத் தொடங்கும் பொழுதே, அச்செயல் ஒருவருக்குப் போட்டியாகவோ அவரை வீழ்த்துகின்ற நோக்குடனோ தொடங்குவதாக எண்ணுதல் கூடாது. அல்லது அந்நோக்கத்துடன் தொடங்குதல் கூடாது. நமக்கும் அச்செயலுக்கும் உள்ள உறவு அல்லது இணைவு அல்லது பொருத்தம், நாம் அதைச் செய்யவேண்டுவதன் நோக்கம், அதனால் கிடைக்கவிருக்கும் பயன் போன்றவற்றையெல்லால் நல்ல எண்ணத்துடனேயே கருதிப் பார்க்க வேண்டும். அவ்வாறில்லை யாயின், அச்செயல் படிப்படியாக நசித்து வெற்றியடையாமல் போகும். காரணம் நம் முழு எண்ணமும் உணர்வும் அச்செயலில் படியாமல், நம் தவறான எண்ணங்களிலேயே தோய்ந்து, விளைவைக் கெடுப்பதுதான்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்

(178)

இப்பொய்யாமொழியுள் அக்கருத்து விளங்கித் தோன்றுவதைக் காண்க. இந்நிலையில் ஒருவர் எத்துணை அறிவு வாய்ந்தவராக இருப்பினும் கூட பயன்படுவதில்லை. அந்த அறிவும் தீயவற்றிலேயே பெய்யப்படுவதால், அதுவும் பாழாகவே போகும் என்பதைத் திருவள்ளுவப் பேராசான்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

(175)

என்னும் குறட்பாவில் நன்கு உணர்த்தியுள்ளார். இக்கருத்துகள் சாவிப்புப் போலவோ, ஊழ்வழிப் பட்டனவாகவோ உரைக்கப் பெற்றனவல்ல. மனவியலும், அறிவியலும் கலந்து செயன்மையைத் தாக்கும் இயல்பியல் அல்லது இயங்கியல் கோட்பாடுகள் வழியே உரைக்கப் பெற்றனவாகும். நமக்கு ஆக்கம் வேண்டும் என்றெண்ணுவது பிழையன்று; இன்னொருவருக்கு ஆக்கம் வருதல் வேண்டாம் என்றோ அல்லது அவருக்கு வருகின்ற ஆக்கம் நமக்கும் வரவேண்டும் என்றோ விரும்புவதுதான் தீயவெண்ணம். எனவே, பிறன் பொருளும் நமக்கு