பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

செயலும் செயல் திறனும்



வேண்டாம் நம்மால் பிறர்க்கு இழப்பும் நேரவேண்டாம் என்று எண்ணும் எண்ணம் உயர்ந்தது. அதே மன உயர்வைக் காட்டுவதாகும். அதுவே, நம்மைச் செயலில் ஊக்கும் மனப்பாங்காகும். அதுவே, வெற்றியை ஈட்டித் தரவல்ல விருப்பம்.

இறலினும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை என்னும் செருக்கு

(180)

இனி, செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு நல்ல நம்பிக்கையும் மிக வேண்டுவதாகும். நம்பிக்கை என்பது நல்லெண்ணங்களை ஊக்குவிக்கும் ஒரு மனவுணர்வு. இம்மனவுணர்வு இல்லெனின் அனைத்துச் செயல்களின் நடைமுறையிலும் அவநம்பிக்கை தோன்றி ஊக்க உணர்வைக் கெடுக்கும். அது செயலில் தொய்வை உண்டாக்கும். வருகின்ற நல்விளைவு எத்தகையது என்று தெரியாமற் போயினும், அதன்பாலுள்ள நம்பிக்கை நமக்கு அச்செயலுக்கான மன உரத்தையும் முயற்சியையும் கட்டாயம் தரும் தரவே அச்செயலில் நாம் முழு ஈடுபாடு காட்டி, நம் வினையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை உறுதியாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

(666)

நம்பிக்கையில்லாதவர்களுக்கு இவ்வுலகமே வெறுமையாகத் தோன்றும். அவர்கள் எதையும், எவரையும் ஐயப்பாட்டுடனேயே பார்ப்பர். எனவே, அவர்களின் செயல்களில் உறுதிப்பாடு இராது; தெளிவு இராது. முடிவு அண்மையில் இருக்கும்; அதில் வெற்றி இருக்கும் என்று நம்பாதவர்களுக்கு முயற்சியும் கூட முழுமையாய் இராது. எனவே, ஒரு வேளை தோல்வி ஏற்பட்டாலும் ஏற்படும். நம்பிக்கையின்மை தோல்வியைச் சந்திக்கின் மனம் தொய்ந்து போகிறது. எனவே, நாம் எடுத்துக் கொண்ட வினையில் நமக்கு வெற்றியுண்டாகும் என்ற நம்பிக்கை வேண்டும். இத்தகைய நம்பிக்கையால் உலகில் எத்தனையோ ஆக்கமான செயல்கள் நிகழ்ந்திருக்கின்றதைப் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றும் உணர்ததிக் கொண்டிருக்கின்றன.

2. உள்ளச் சோர்வு

1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும்

உடல், உள்ள இயக்கத்திற்கு அடிப்படை என்று முன்னர் பலவிடங்களில் விளக்கப் பெற்றுள்ளது. நலம் குறைந்த உடல் உள்ளத்தையும் நலிவுறச் செய்கிறது. அது பொதுவான நடைமுறை. ஆனால் உடல் நலமாக உள்ளவர்களும், வேறு வகையான புறத்தாக்கங்களால், உள்ளச் சோர்வு கொள்கிறார்கள். இவ்வாறு ஏற்படுகின்ற உள்ளச் சோர்வு, நல்ல உடலையும் தாக்குகிறது.