பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

செயலும் செயல் திறனும்



ஒலிக்கும் ஒளிக்கும் எவ்வாறு ஒலியலையும் ஒளி அலையும் ஆக இரண்டு வகையான அலைகள் இருக்கின்றனவோ, அர்வாறே நம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் இருவேறு வகையான அலைகள் உண்டு.

ஒன்று எண்ண அலை; மற்றது அறிவு அலை;
எண்ண அலை (உள்ள அலை) உணர்வு எனப்பெறும்.
அறிவு அலை அறிவு எனப்பெறும்.
உடல் அலை (அ) அல்லது அசைவு செயல் எனப்பெறும்.

இம்மூன்று செயற்பாடுகளுக்கும் மூளைதான் கருவியாக இருக்கிறது.

6. மொத்த இயக்கங்கள்

எனவே, நம் ஒவ்வொருவருக்கும் மொத்தம் ஆறு இயக்கங்கள் உள்ளன. உடல், உள்ளம், அறிவு - ஆகிய ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு இயக்கங்களாக ஆறு இயக்கங்கள் உள்ளன. அவற்றை இவ்வாறு வகைப்படுத்தலாம்.

உடலுக்கு :
1. விரும்பா இயக்கம் அல்லது தன்னியக்கம்
2. விருப்ப இயக்கம் அல்லது செயல்.
உள்ளத்திற்கு :
1. தோன்றும் எண்ணம் அல்லது நினைவு
2. தோற்றும் எண்ணம் அல்லது எண்ணுவது அல்லது நனவு
அறிவிற்கு :
1. தானாய் அறிய வருதல் அல்லது அறிவு
2. நாமாய் அறிதல் அல்லது பகுத்தறிவு
(இது நம் பொறி, புலன்களால் அறிதல்)
7. ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா?

இவ்வாறு இயக்கங்களுக்கும் மேலான அல்லது வேறான ஏழாவது இயக்கமும் அதற்கான ஓர் உணர்வு அலையும் உண்டு. அதுவே மெய்யுணர்வு அல்லது மெய்யறிவு.

மெய்யுணர்வின் அல்லது மெய்யறிவின் காரணியாக - மூலப் பொருளாக நிற்பதே இறைமை. இவைபற்றியெல்லாம் விரிப்பின் பெருகுமாகலினாலும், அவை காலத்தால் உணரப்பெற வேண்டிய பேரறிவு ஆகலாலும், அவ்வகண்ட அறிவின் ஒரு சிறு கூறே இங்குத் தேவை கருதி விளக்கப் பெறுதல் போதும் ஆகையினாலும், இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.