பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

165



இனி, இவ்விடத்து நாம் கவனிக்க வேண்டியது, உள்ளத்தையும் நாம் இயக்க முடியும் என்பதே

8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும்

உடல் நலிவால் உள்ளம் ஊக்கமிழக்குங்கால், உடலுக்கு நலமூட்டி, அதன்வழி உள்ளத்தைச் சோர்வுறாமல் செய்யலாம். ஆனால், உடல் நலமாகவே இருந்து, வேறு பிற காரணங்களால் உள்ளம் நலிவுறுமானால், அதனை அறிவு கொண்டும் உடல் நலத்தையே முன் வைத்தும் தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்; ஊக்கப்படுத்தல் வேண்டும்.

நாம் உடல் நலமாக உள்ளோம்; வலிவாகவும் உள்ளோம். நாம் நன்றாக உள்ள பொழுது இந்த இடும்பைக்காக துன்பத்திற்காக - தொய்விற்காக இடையூறுக்காக நாம் ஏன் ஊக்கமிழக்க வேண்டும்? இந்த இழப்பை துன்பத்தை வேறு வகையாக ஈடுகட்டிக் கொள்ளலாமே. இதை ஏன் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும் என்று அடிக்கடி எண்ணி மனந்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்க.

உள்ளத்தை இயக்குவது அறிவு - என்பதைத் திருவள்ளுவப் பேராசான், நன்றின்பால் உய்ப்பது அறிவு 422) என்னும் குறட்பாவால் உணர்த்துகிறார். உய்ப்பது என்னும் சொல்லுக்கு இயங்குவது, செலுத்துவது, ஆற்றுப்படுத்துவது, உய்விக்கச் செய்வது, தேற்றுவது, மலர்த்துவது என்றெல்லாம் பொருள். எனவே, அவ்வப்பொழுது நேரும் உள்ளச் சோர்வை அறிவுணர்வால் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உற்றுணர்ந்து கொள்க.

3. அறிவுத் தளர்ச்சி
1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது?

உடல் நலிவுற்றால் உள்ளத்தால் ஊக்கமிழக்காமல் இருக்கலாம். அதேபோல் உள்ளம் சோர்வுற்றால் அறிவால் தேற்றலாம். இனி, அறிவே சோர்வுற்றால் என்ன செய்வது? பெரும்பாலும், உடல் நலிவு எல்லாருக்கும் தெரியக்கூடியதாக இருக்கும். பிறர்க்கும் தெரியும்; நமக்கும் தெரியும். அதை முழுவதுமே மூடி மறைத்துவிட முடியாது. உடல் நலிவு நோய்களாலும், உறுப்புகள் தாக்கத்தாலும், ஒய்வின்மையாலும், ஊட்ட உணவு பற்றாக்குறையாலும் வரும்.

2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு

உள்ளச் சோர்வு என்பது எல்லாருக்குமே தெரியக் கூடியதாக இராது. மிகத் திறமையான மனவுணர்வு உள்ளவர்களால்தாம் பிறருடைய உள்ளச் சோர்வைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள்