பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

167கடினம். அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அல்லது என்ன நினைப்பார்கள் என்பதை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது. பெரும்பாலும் இவ்வுலகில் பிறரின் துன்ப துயரங்களைக் கண்டு உள்ளத்தில் மகிழ்கின்றவர்களே அதிகம். அவ்வாறில்லாமல், நல்ல பொதுவுணர்வுடன் நம்மேல் உண்மை அன்பு காட்டுபவர்களும் நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவர்களும் மிகமிகக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களை நாம் இனம் பிரித்தறிவது மிகமிகக் கடினம். இந்நிலையில் வீணாக ஏன் பிறரிடம் நம் துன்ப, துயரங்களைச் சொல்லுதல் வேண்டும்? ஒரு வேளை, நமக்கு மாறானவர்களிடம் நம் கேடுகளையும் மனத் துயரங்களையும் கூறிக் கொண்டு ஆறுதல் பெற விரும்புவதால், நமக்கு இரக்கம் காட்டும் உணர்வுக்கு மாறாக அவர்களிடமிருந்து இழிவும் எள்ளலும் சில நேரம் கெடுதலுமே நமக்கு வரவாக வரலாம்.

எனவே, நம் உள்ளச் சோர்வையும், துயரங்களையும் பிறரிடம் சொல்லாமல் இருப்பதே பொதுவில் நல்லது என்று கருதிக் கொள்ள வேண்டும்.

4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன ?

இனி, உள்ளச் சோர்வையே பிறரிடம் கூற வேண்டியதில்லை என்று ஆனபின், நம் அறிவுத் தளர்ச்சியை யாரிடம் போய்ச் சொல்வது? இதைத் தீர்மானிக்குமுன் அறிவுத் தளர்ச்சி என்றால் என்னவென்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்வது நல்லது.

ஒரு செயலில் நாம் ஈடுபடும்பொழுது, அச்செயலைப் பற்றி எழுகின்ற சிக்கலாலோ, அதனால் ஏற்படுகின்ற இடர்ப்பாட்டுச் சூழலாலோ, அல்லது அந்நிலையில் வரும் எதிர் விளைவுகளாலோ, நம் அறிவுக்கு ஏதோ விளங்காத ஒரு முட்டுப்பாடும் தளர்ச்சியும் உண்டாகும். சே! என்ன நம் அறிவு. அறிவில்லாமல் இதில் போய். இறங்கி விட்டோமே, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே. என்று நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியிருக்கும். அப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட செயல் மீதே நாம் வெறுப்புக் கொள்ள வேண்டி வரும். அல்லது சோர்வு கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் கூட நாம் சோர்வு அடைய வேண்டுவதில்லை.

5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை

அப்பொழுதும் எப்பொழுதும் நமக்கு ஒரு தன்னம்பிக்கை தேவை. நம் உள்ளம் சோர்ந்து போகும்பொழுதும் சரி, அறிவு தளர்வுறும் பொழுதும் சரி, 'இச்செயலை நம்மால் செய்ய முடியும். நாம் சோர்வடையத் தேவையில்லை நமக்கு இன்றைக்கு இந்நிலை உள்ளது. நாளை இந்நிலை மாறலாம். அல்லது மாற்றி விடலாம்' என்னும்