பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

169



எனவே, ஒருவர், தம் செயலுக்கிடையில் எதிர்ப்படும் அறிவுத் தளர்ச்சி கொள்ளுதல் தேவையில்லை; அவ்வாறு நேரினும், அதனைத் தம் உள்ளுணர்வாலோ அறிவு நம்பிக்கையாலோ, நம் அறிவால் இயலாத நிலையில், கல்வியொழுக்கம் நிறைந்த பண்புடையாளர் வழி, அவர் அறிவால் கண்டு காட்டிய தீர்வுகளைக் கேட்டறிந்து, மேலும் செயலின் கண் ஊக்கமுடன் ஈடுபடுதல் வேண்டும் என்க.

9. புறத்தாக்கம்

இது நமக்கு வெளியிலிருந்து வரும் தாக்கம். நம் செயலுக்கிடையில் அகத்தாக்கங்களாக வரும் உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அறிவுத் தளர்ச்சி ஆகிய மூன்றுமோ அல்லது அவற்றுள் ஒன்றோ, அல்லது இரண்டுமோ, நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் பொழுதோ, அல்லது தாக்காத பொழுதோ இப்புறத் தாக்கங்கள் வரலாம்.

இப்புறத்தாக்கங்கள் கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் ஆகியன என்று முன்னர் கண்டோம்.

இங்கு அவை ஒவ்வொன்று பற்றியும் சிறு அளவில் விளக்கி விட்டு மேலே செல்லுவோம்.

1. கருவிச் சேதம்

கருவிச்சேதம் என்பது நம் செயலுக்கு உரிய கருவிகள் சேதமுறுவது அல்லது பழுதுபடுவது. அக்கால் வினை தடைப்படும். அத்தடை குறுகிய காலத் தடையாக இருக்கலாம். அல்லது கொஞ்சம் நீளலாம். இந்நிலையில் வரும் இடையூறுகளுக்காக நாம் வருந்திப் பயனில்லை. ஆனால் இவ்வாறு வரும் அல்லது அடிக்கடி நேரும் என்று அறிந்து, முன்னரே நாம் எச்சரிக்கையாக சேதமேற்படும் அல்லது பழுதுபடும் கருவிகளுக்குரிய சேமக்கருவியை அல்லது துணைக் கருவியை (Space) முன்பே வாங்கி வைத்திருக்கலாம். இவை அடிக்கடி பழுதுறுவனவாக இருப்பின் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் அல்லது காலங்களில் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி இருப்பில் வைத்திருக்கலாம். இப்படி அடிக்கடி சேதம் செய்யும் தொழிலாளர்களை மாற்றி, வேறு நல்ல தொழிலாளரை அமர்த்தலாம். இந்த வகை எச்சரிக்கைகளால் இதன்வழி ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கலாம்.

2. துணைத் தொய்வு

வினைக்குத் துணையாளர்களாலும், தொழிலாளர்களாலும் இடையூறு இது. சிறந்த வினைத்திறம் இல்லாதவர்கள், இடையிடை நின்று கொள்பவர்கள், ஒத்துழைப்புணர்வு அற்றவர்கள், குழுமனப்பாங்குள்ளவர்கள், முரண்படுபவர்கள் ஆகியவர்களால் வரும்