பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

செயலும் செயல் திறனும்இல்லாமல் இருப்பது, செயலைத் தொடங்கிய பின்னர் தெரிய வரலாம். அந்நிலையில் அவ்விடத்தை உடனே மாற்றி, அச்செயலுக்குப் பொருத்தமாய் உள்ள வேறோர் இடத்தில் அதை மாற்றியமைப்பது நன்று. செயலுக்குக் காலம் எப்படி முகாமையானதோ, அப்படி முகாமையுடையது இடமும் ஆகும். எனவே, செயலுக்குரிய இடத்தைத் தேர்வது செயல் தொடங்குவதற்கு முன்னதாகவே செய்ய வேண்டுவது.

செயல் எத்துணைச் சிறந்ததாக இருந்தாலும், அது சரியான இடத்தில் தொடங்கப் பெற்றால்தான் சரியான முழுமையான பயனைத் தர முடியும்.

காடுகள் உள்ள பகுதியில் விறகுக் கடையும், கடலோரத்தில் இரும்புக் கடையும் வைத்தால் எப்படி? நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுந்தாற்போல, பொருந்திய முறையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னரே, அந்தச் செயலை அல்லது வினையைத் தொடங்குதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கண்ட இடத்தில் ஒரு செயலைத் தொடங்கிவிடக் கூடாது, என்பது திருக்குறள்.

தொடங்கற்க எவ்வினையும்; எள்ளற்க முற்றும்

இடம்கண்ட பின்அல் லது

(491)

இத் திருக்குறளில் எள்ளற்க என்னும் சொல், "இடப் பொருத்தமில்லாமல் ஓர் இடத்தை ஒரு செயலுக்குத் தேர்ந்த பின், அச்செயல் பயன் தராத நிலையில், அச்செயலையோ, அதற்குத் துணையான வேறெந்தக் கூறையோ இகழ்தல் வேண்டா” என்னும் பொருளை விளக்கும்.

இனி, ஒரு செயலை ஏதோ ஒரு தேவையோ சடுத்தமோ கருதி ஓர் இடத்தில் தொடங்கி விட்டாலும், அது பயன் குன்றியிருப்பதைக் கண்டு, உடனே அச்செயலிடத்தை மாற்றி, அதற்குப் பொருத்தமான இடத்தை அமைத்துக் கொண்டால், அவ்விடப் பொருத்தமின்மையால் வரும் இடர்ப்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்க.

7. ஆட்சி முரண்

இனி, ஆட்சி முரண் என்பது செயல் ஆளுமையால் வரும் இடர்ப்பாடு என்க. இஃதன்றி, அதிகாரக்காரர்களால் வரும் இடர்ப்பாடும் ஆகும்.

ஒரு செயல் எத்துணைச் சிறப்பினதாக இருந்தாலும், எத்தனை அடிப்படைக் கூறுகளை நிறைவுறக் கொண்டிருந்தாலும், அஃது ஆளும் திறம் இல்லாமையால் கேடுறும் என்க.

செயலாளுமை என்பது தனிச்சிறப்புப் பொருந்தியது. 'ஒரு செயலில்