பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

173



ஈடுபட விரும்பியவன் தன்மை, செயலினது தன்மை, செய்கின்ற முறை, அச்செயலைச் செய்கின்றவன் தன்மை - ஆகிய நான்கையும் எண்ணியே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

செய்வினை, செய்வான், செயல்முறை, அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

(677)

என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்து. செயல்முறை என்பது செயல் செய்கின்ற முறையையும் ஆளுமையையும் குறித்தது. செயலை உள்ளறிவான் என்பவனே அச்செயலைச் செய்ய விரும்பியவன். இவனே ஆளுமைக்கு உகந்தவன். இவன் தன்னாளுமை, தன்னுணர்வு, தன்னறிவு பெற்றவனாகவும், செய்யப் பெறுகின்ற செயலை முழுவதும் அறிந்தவனாகவும் இருத்தல் வேண்டும். தான் பலர் கருத்துக் கூறுவதைக் கேட்கும் உரிமையும், பொறுமையும், ஆர்வமும் உள்ளவனாக இருப்பினும், செயல் பற்றிய முடிவைத் தானே இறுதி செய்யக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லையானால் முடிவு சிதறும்; கெடும் சிறப்பு எய்துதல் கடினம்.

ஒருவர் எல்லாரையும் நிறைவு செய்தல் கடினம். எல்லாருக்கும் உகந்தபடி ஒருவர் நடக்க இயலாத நிலையில், தக்கவர் அறிவுரையைக் கேட்கலாம். ஆனால் அதையும் ஆளுமையுள் நிலைப்படுத்துதல் கடினம்.

எனவே, செயலாளுமை என்பது ஒன்றைக் கண்டறிதல், கேட்டறிதல், உசாவியறிதல், ஆய்தல், நடுநிலை உணர்வுடன் முடிவு செய்தல் என்னும் படிநிலைகளைப் பொறுத்தது ஆகும் என்று அறிக

இது வரை கூறியவற்றால் நாம் ஒரு செயலைச் செய்ய முற்படுகையிலோ, அது நடைபெறுகையிலோ, உடலாலும், அதன் வழி உள்ளத்தாலும், அவற்றின் வழி அறிவாலும், சில பல இடர்ப்பாடுகள் வந்து வாய்க்கலாம் என்றும், அவ்வாறு வரும் இடர்ப்பாடுகளை எவ்வாறு முன் எச்சரிக்கையுடன் இருந்து தடுத்து நிறுத்திக் கொள்ளமுடியும் என்றும், பலவாறு விரித்தும் ஒருவாறு தொகுத்தும் விளக்கப்பெற்றன.

செயலுக்கிடையில் வரும் அகப்புற இடர்ப்பாடு களாலேயே, பெரும்பாலான செயல்கள் நின்றுபோதல், உலகியல்பாக உள்ளதாலும், பெரும்பாலார் அதன் மேலும் செயலைத் தொடர்தல் இயலாமையாலும், இத்தலைப்பை இத்துணை விளக்கமாகவும் விரிவாகவும் கூற வேண்டி வந்த தென்க. இனி, அடுத்த தலைப்பிற்கு வருவோம்.