பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. இழப்பு கண்டு சோர்வுறாமை

1. ஊதியமும் இழப்பும்

செயலின்கண், அடுத்த தடையாக வந்து நிற்பது இழப்பு. ஊதியமற்ற செயலில் ஈடுபட ஒருவரும் விரும்பார். ஊதியம் என்பது உழைப்பால் வரும் செயல் விளைவு தொடக்கத்தில் நாம் ஒரு செயலில் ஈடுபடுத்திய முதல், நம் தொடர்ந்த முயற்சியாலும் உழைப்பாலும், ஒன்றுக்கு இரண்டாகவும், இரண்டுக்கு மூன்றாகவும் பல்கிப் பெருகி, மேன்மேலும் அச்செயலைத் திறம்படச் செய்வதற்கு வரும் இயல்பான கூடுதல் வருவாயே ஊதியமாகும். அக்கூடுதல் வருவாயை நாம் நம் வாழ்க்கைக்கும் ஓரளவு பயன்படுத்திக் கொண்டு, நாம் மேற்கொண்ட செயலை மேலும் பெருக்கவும் சிறப்புற நடைபெறவும் அவ்வருவாயின் எச்சத்தை மீண்டும் ஈடுபடுத்துவதே அச்செயலை நிலைநிறுத்துவதாகும்.

'முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை' (449) என்பதால், முதல் இல்லாது போனால் ஊதியமாக வருவதும் இல்லாமற் போவதும், முதல் குறைவாக இருந்தால், ஊதியமும் குறைவாக வருவதும் உலகியல்பு. ஊதியமே இல்லாத முதலையும் இழந்து போகிற ஒரு செயலை எவருமே செய்யார்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் (463)

என்பது பேரறிஞர் கூற்று.

இனி, முதல் என்பது பொருளும், உழைப்பும் அவ்வுழைப்புக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும். முதல் என்பது வெறும் பொருள் மட்டுமில்லை என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி, உழைப்பு என்பது நம்முடைய உழைப்பும், நம்மைச் சார்ந்த செயல்திறமுடையோர் உழைப்புமாகும். இனி, செயலறிவு இல்லையாயின் நாம் முதலீடாகப் போட்ட பொருளும், உழைப்பும் வீணாகப் போய் இழப்பையே ஏற்படுத்தும். எனவே, ஒரு செயலுக்குப் பொருளும், உழைப்பும் எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு