பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

175இன்றியமையாதது செயலறிவு செயலறிவில்லாமை பொருள், உழைப்பு இவை இரண்டும் இருப்பினும் இழப்பையே தரும், இனி, இழப்பை மட்டுமன்று, சில துன்பங்களையும் தரும். இதை நன்கு விளக்குகிறது. பேராசானின் கீழ்வரும் மெய்யுரை.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (831)

இனி, விருப்பமற்ற, அதுபற்றிய அறிவில்லாத செயலுள் ஈடுபடுவது, அறியாமையிலும் அறியாமை யாகும் என்பார் திருவள்ளுவர். (ஒன்றைப் பற்றி அறிந்தால்தான், நமக்கு அதன்மேல் விருப்பம் ஏற்படும் என்பது மனவியல்)

பேதைமையு ளெல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)

இனி, 'செயலறிவில்லாமல், பேதைத் தனமாக ஒருவன் ஒரு செயலில் ஈடுபடுவானானால், அவனும் கெடுவான்; அவன் மேற்கொண்ட அச்செயலையும் கெடுத்துவிடுவான்' என்பது அவர் எச்சரிக்கை

பொய்படும் ஒன்றே புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின் (836)

இதில் பொய்படும் என்பது உருப்படியாகாமல் பொய்யாய்ப் போய்விடும் என்பதையும், புனைபூணும் என்பது, 'அச்செயல் நான் இதைச் செய்கிறேன் என்னும் வெறும் ஆரவாரத்தையே விளைவிக்குமேயன்றிப் பயனை அல்லது ஊதியத்தை விளைவியாது' என்பதையும் உணர்த்தும்.

முதலும் உழைப்பும் ஊதியமாக அல்லது வருவாயாக மாற்றம் பெறுதல் வேண்டும். அல்லாக்கால் அந்த முதலாலும் பயனில்லை; உழைப்பாலும் விளைவில்லை என்றே பொருளாகும்.

இனி, செய்கின்ற செயலுள் ஒரொவொருகால் காலநிலை, விலை ஏற்ற இறக்க நிலை, போட்டிகள், பொருள் உருவாக்க மிகுதி, கருவிச் சேதம், ஊழியர் ஒத்துழைப்புக் குறைவு, உழைப்புக் குறைவு முதலியவற்றால் நாம் எதிர்பார்த்த ஊதியம் வராமற் போகலாம்; அல்லது இழப்பு ஏற்படலாம். இவ்வெதிர்பாராத நிலைக்காக நாம் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை என்பதே இக்கட்டுரைப்பகுதியின் அறிவுறுத்தமாகும்.

மேலும், ஊதியம் என்பதும், இழப்பு என்பதும் பொருளளவாக மட்டுமே கணிக்கப் பெறும் கூறுகள் அல்ல.