பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20. துன்பம் கண்டு துவளாமை

1. தோல்வியும் துன்பமும்

செயலில் தோல்வி என்பது வேறு, துன்பம் என்பது வேறு. தோல்வி என்பது செயலினால் வருவது.துன்பம் செயல்களுக்கிடையில் வருவது, துன்பம் என்பது தோல்வியன்று. ஒரு செயலை வெற்றியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. தோல்வியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. இவ்விருவகைத் துன்பங்களும் அகமும், புறமும் ஆகும். செயலில் அகத்துன்பமானாலும் சரி, புறத்துன்பமானாலும் சரி, அவற்றால் நாம் மனச்சோர்வு கொள்ள வேண்டியதில்லை.

செயலினால் வரும் அகத்துன்பங்கள், செயல் முடக்கம் முதலீடு போதாமை, போதிய ஆள் துணையின்மை, கருவிப் பழுது முதலியவற்றால் வருவன. புறநிலைத் துன்பங்கள் உடல் ஒத்துழையாமை, எதிரிகள் இடையூறு, துணைப் பொருட் குறைவு, காலம் இடம் பொருந்தாமை முதலியவற்றால் வருவன. இவ்வகையான துன்பங்களுள் எது வரீனும், அத்துன்பத்திற்கான காரணத்தை ஆய்ந்து கண்டு, அதனைப் போக்குவதற்குரிய முறையைத் தேர்ந்து, அதைத் தீர்க்க வேண்டுமே அன்றி, அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டு, அறிவும், முயற்சியும், செயலும் முடப்பட்டு நிற்க வேண்டும் என்பதில்லை.

ஒரு செயலை இதுதான் நமக்குரியது என்றும், இதனால் தான் நாம் பயனோ, மகிழ்ச்சியோ, விளைவோ பெற முடியும் என்றும் கருதித் தேர்ந்து, ஈடுபாடு கொண்டு அதில் இறங்கிய பின், எதிர்பாராமல் வரும் அகப் புறத்துன்பங்களுக்காக நாம் அலமர வேண்டியதில்லை.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (669)

என்பார் அறவாசிரியர்.துன்பம் வருபம்பொழுது, அச்செயலால் நாமோ, பிறரோ அல்லது உலகமோ பெறப் போகும் அச்செயலின் விளைவையும் பயனையும் எண்ணிப் பார்த்துத் துணிவாக அதில் ஈடுபட வேண்டும்.

2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது

துன்ப நிலைகளால் உறுதியாக இருக்க வேண்டிய உள்ளம், கலக்கமுற்று உறுதியிழக்குமாயின், மீண்டும் அது உறுதி பெறுவது கடினம். உள்ளத்தின் உடைவு கண்ணாடியின் உடைவைப் போன்றது. சரி