பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

செயலும் செயல் திறனும்வேண்டும். பெரிய கல்லைப் பெயர்ப்பதில், சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு வேண்டிய சிறிய வலிவே போதும் என்று எண்ணிவிடக் கூடாது. சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு நமக்கு இயல்பாக உள்ள உடல் வலிவே போதுமானதாக இருக்கலாம். ஆனால் பெரிய கல்லைப் பெயர்ப்பதற்குப் போதுமான உடல் வலிவுடன், மனவலிவும், அறிவு வலிவும் தேவையாக இருக்கலாம். அக்கால் உடல் துன்பமும், மனத் துன்பமும், அறிவுத் துன்பமும் இருக்கலாம். இன்னும் தேவையானால் ஒரு துணைக் கருவியும் வேண்டுவதாக இருக்கலாம். இந் நால்வகைக் கரணப் பொருள்களையும் கொண்டு ஒரு கருமத்தைச் செய்யுங்கால், அந்நால்வகைக் கரணப் பொருள்களாலும் வரும் துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டுமன்றோ? அக்கால் துன்பம் அளவில் பெரிதாகத்தானே இருக்கும். அதற்காக மலைத்து நிற்க முடியுமா? மலைத்து நின்றால் செயல் என்னவாது? எனவே செயலை விரும்பியவர் துன்பத்தையும் எதிர்பார்க்க வேண்டும்; இன்னுஞ் சொன்னால் அத்துன்பத்தையும் விரும்ப வேண்டும்.

4. துன்பம் என்பதன் பொருள்

துன்பம் என்பது வேறொன்றுமில்லை; செயலால் வரும் எதிர்வுநிலை, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு எதிரான, அதற்கு நிகரான ஒரு எதிர்ச் செயல் உண்டு என்று முன்பே கண்டோம் இல்லையா? அந்த இணையான எதிர் விளைவு தான் துன்பம்.துன்னுதல் என்றால் பொருந்துதல். இதன் வேரடியாகப் பிறந்த சொல்லே துன்பம். எனவே துன்பம் எனில் பொருந்தி வரும் எதிர்ச்செயல் என்பதே பொருள். ஒரு செயலுடன் பொருந்திவரும் எதிர்ச்செயலே துன்பம் எனப்படுவது. எதிர்ச்செயல் இல்லாமல் ஒரு நேர்ச்செயல் இல்லை. ஒரு கல்லைப் பெயர்க்கும் பொழுது, நாம் எத்தகைய ஆற்றலை அக்கல்லின் மேல் செலுத்துகிறோமா, அதே ஆற்றலை அக்கல்லும் நம்மேல் செலுத்துகிறது. நாம் நம்முடைய உடல் வலிவைக் கொண்டு ஆற்றலைக் கொண்டு அக்கல்லைப் பெயர்க்கும்பொழுது, அக்கல்லும் அதன் எடை வலிவைக் கொண்டு, நம்மை எதிர்த்துச் செயல்படுகிறது. அந்த ஆற்றலை வெல்லுவதே நாம் அந்தக் கல்லைப் பெயர்ப்பது. சிறுபையன் ஒருவன் அந்தக் கல்லை அசைக்கவும் முடியவில்லை என்பது, அச்சிறுவனின் உடல் ஆற்றலைவிட, அக்கல்லின் கன ஆற்றல் மிகுதியாக உள்ள தென்பதே பொருள்.

எனவே, ஒரு செயலால் வரும் எதிர்ச் செயலேதுன்பம், அவ்வெதிர்ச் செயலுக்கு மீறிய செயலாக, நம் ஆற்றலையும், அது மட்டும் போதாதபொழுது நம் மன ஆற்றலையும், அதுவும் போதாதபொழுது நம் அறிவாற்றலையும், அதுவும் போதாத பொழுது ஒரு துணைக் கருவியின் ஆற்றலையும் சேர்த்து அக்கல்லின் கன ஆற்றலை நாம் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே செயல்.