பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

183



5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம்

இப்பொழுது இக் கல்லைப் பெயர்க்கும் செயலை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். நாம் பெயர்த்தெறியும் கல்லுக்கு உள்ள ஆற்றல் அதன் எடையே. அல்லது கணமே. ஆனால், அக்கனத்தை - அவ்வெடையைப் போலவே நம் கனமும் அல்லது எடையும் இருந்தால் நாம் எவ்வாறு அக்கல்லைப் பெயர்க்க முடியும்? அக்கல்லுக்கு அதன் எடை ஒன்றுமட்டுந்தான் ஆற்றலாக அமைகிறது. அதற்கு வேறு பிற ஆற்றல்கள் இல்லை. அஃதாவது அக்கல்லுக்கு மன ஆற்றலோ, ஒரு துணைக் கருவியைப் பயன்படுத்தும் ஆற்றலோ இல்லை. ஆனால் நமக்கோ நம் உடலின் எடையாற்றலைவிட, மன ஆற்றலும் அறிவாற்றலும் கருவியாற்றலும் கூடுதலாக இருக்கின்றன. எனவே, அக்கல்லின் எடையாற்றலை வெல்ல, நம் உடலின் எடையாற்றல் போதாத பொழுது, நம் மன ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.

ன ஆற்றல் என்பது நாம் அக்கல்லைப் பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகின்ற எண்ணம். அதன் உறுதி. எண்ணம் ஒரு நுண்ணுணர்வுதானே. அதற்கு ஆற்றலுண்டா என்று கேட்கத் தோன்றுகின்றதா? ஆம் எண்ணத்திற்கு வலிவுண்டு எண்ணத்தின் வலிவு பொதுவாக நமக்குத் தெரிவதில்லை. எண்ணம் ஒரு வகை நுண்ணிய அலைகளை உண்டாக்குகிறது. ஆனால், அது காற்றைப் போலவோ ஒளியை அல்லது ஒலியைப் போலவோ, உணரப் பெறுவதில்லை. அவ்வெண்ண அலைகள் அவற்றினும் மிக நுண்ணிய வாகையால், பிறவற்றைப்போல் நாம் அதை அவ்வளவு எளிதாக உணர்வதில்லை. ஆனால், அவ்வலைகள் அவ்வொலி, ஒளி அலைகளைவிட, மிக நுண்ணியனவும், மிக வேகம் உடையனவும் ஆகும்.

மின்சார அலைகள் எவ்வாறு மின் விசிறியை - உந்ததத்தை இயக்குகின்றனவோ, அவ்வாறே எண்ண அலைகள் பருப்பொருள்களின் மேல் இயைந்து அவற்றை இயக்குகின்றன. ஆனால், பருப்பொருள்களை அவ்வலைகள் இயக்குவதை நாம் உணர்வதைவிட, உயிர்ப்பொருள்களை அவை இயக்குவதை நாம் எளிதில் உணர முடியும். எண்ண அலைகள் உயிராற்றலுடன் கலந்து உயிர்ப் பொருள்களை இயக்குகின்றன. அல்லது ஆட்சி செய்கின்றன. ஆனால், இயக்கப் படும் உயிர்ப் பொருள்களின் நிலைகளும், அவற்றின் ஆற்றல்களுக்கு ஏற்ப அவ்வெண்ண அலைகளுக்கு ஆற்றலை மிகுத்தோ, குறைத்தோ செயல்படுதல் வேண்டும்.

6. எண்ண அலைகள், ஆற்றல்கள்

பெரும்பாலும், நம்மிடத்துத் தோன்றும் எண்ண அலைகள் நம்முடைய உடலை இயக்கவே போதுமான அளவில் ஆற்றலில் இயங்குகின்றன; அவை பிறருடைய உடலை இயக்குமாறு எழுப்பப்பெற