பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

செயலும் செயல் திறனும்



வேண்டுமானால், இயக்கப்படும் ஒருவருடைய உடலாற்றலினும், அவருடைய எண்ண ஆற்றலினும் வலிவுடையனவாக, எழுப்பப்பெறல் வேண்டும். மீண்டும் அந்தக் கல்லைப் பெயர்க்கும் கதைதான். முதலில், பிறருடைய எண்ண ஆற்றலைச் செயலிழக்கச் செய்யவும், அதன்மேல் அவருடைய உடலை இயக்கவும் போதுமான வலிவுடன் நம் எண்ண ஆற்றல் செயல்பட்டால்தான் நாம் பிறருடைய உடலை எண்ணத்தினால் இயக்க முடியும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். (676)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)

தெரிந்த இனத்தொரு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (462)

எண்ணித் துணிக கருமம் (467)

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் (497)

பொருள் கருவிகாலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (675)

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உறைப்பான் தலை. (687)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு. (595)

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. (598)

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)

என்பனபோல் வரும் இடங்களில் எல்லாம், நாம் மேலே கூறிய உண்மைகள் புலப்படுத்தப் பெற்றுள்ளவற்றை ஆய்ந்து கண்டு கொள்க. மேலும் இவற்றுள் எண்ணமும் அதற்கிடனாய் உள்ளமும் வேறு வேறு கரணிய கருமங்கள் பற்றி மாறி மாறிக் கூறப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் விரிக்கின் மிகப் பெருகுமாகலின் ஈண்டு இந்த அளவில் மட்டும் கூறப்பெற்றன.