பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

செயலும் செயல் திறனும்


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)

இனி, இவையே மட்டுமல்லாமல் துன்பத்தையே இன்பம் என்று கொள்ளுதல் வேண்டும் என்பதும் அவரின் மெய்ப்பொருள் சான்ற கருத்தாகும்; அவ்வாறு கொண்டால்தான் தம் பகைவரும் தம்மை விரும்பும்படியான பெருமையை ஒருவர் பெறமுடியும் என்கிறார் அவர். அவ்வாய் மொழியைப் பாருங்கள்.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. (630)

9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள்

இன்பம் என்பதும் துன்பம் என்பதும் ஒரே செயலின் இரண்டு தன்மைகள். ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை. அவ்வாறு இயங்கச் செய்யவும் முடியாது. உடம்பு செயலுக்குரியது. செயலோ துன்பத்திற்கும் இன்பத்திற்கும் இடையில் இயங்கும் ஒர் அசைவுப் பொருள். எனவே உடம்பு துன்பத்திற்கும் இன்பத்திற்கும் பொதுவான ஒர் அச்சு. நம்மால் இன்பத்தை ஏற்று நுகர்வதைப் போல் துன்பத்தை ஏற்று நுகர முடியாமல் போவதால், துன்பமே பெரிதாகத் தோன்றுகிறது. இன்னுஞ் சொன்னால் இன்பமும் ஒரு துன்பமே. துன்பமும் ஒர் இன்பமே. மெய்ப்பொருளடிப்படையில் கூறுவதானால், மிகுந்த இனிப்பு கசப்பாவுதுபோல், மிகுந்த இன்பம் மிகுந்த துன்பத்திற்கே அடிப்படையாக விளங்குவதால், உயிர் கூறுகளுக்குத் துன்பமே மிகுதியும் நுகரப் பெறும் உணர்வாக விளங்குகிறது. இன்பமோ சட்டென்று மாய்ந்துவிடும் ஓர் உணர்வாக விளங்குகிறது. எனவே, திருவள்ளுவப் பேராசான் உடம்பே துன்பத்தை இட்டு நிரப்பும் கலனாக உள்ளது என்றார். உடம்பே ஒரு துன்பம். அஃது உயிருக்குச் சுமை என்னும் மெய்ப்பொருள் உண்மையினையும் எடுத்து விளக்குகிறார். கீழே உள்ள இரண்டு திருக்குறட்பாக்களையும் கவனியுங்கள்.

இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு. (1029)

மற்றுத் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (345)

10. துன்பமே இன்பம் ; இன்பமே துன்பம்

இனி, துன்பமே இன்பம்; இன்பமே துன்பம் என்னும் உண்மையை உணர்ந்தபின் இன்னோர் உண்மையையும் அதனை ஒட்டி நாம் உணர்தல் வேண்டும். அஃதாவது துன்பத்தை நாம் நுகரவில்லையானால்