பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

செயலும் செயல் திறனும்



ஒரும் அறனே என்று முழங்குகிறது திருக்குறள் (40). அவற்றைச் செய்பவரே போற்றுதற்கும் புகழ்தற்கும் உரியவர். 'செயற்கரிய செய்வார் பெரியர்' (26) என்பது திருக்குறள் இலக்கணம்.

எல்லாருக்கும் பயனுடைய செயல்களைச் செய்வது மிகக் கடினம்! எனவேதான் பலர் அவற்றைச் செய்யாமல், தங்களால் இயன்ற எளிய செயல்களையே செய்ய விரும்புகின்றனர். இனி, செயல்களைப் பற்றிச் சொல்லுதல் எவர்க்கும் எளியது; ஆனால், அவற்றைச் செய்வது கடினமானது. (664)

பெரும்பாலும், இவ்வுலகில், நல்ல செயல்கள் யாவும் கடினமாகவும், கெட்டசெயல்கள் யாவும் எளிமையாகவுமே இருப்பதைக் காணலாம். இன்றைய நிலையில் நல்ல செயல்கள் குறைந்து, நல்லவை அல்லாத செயல்கள் மலிந்து வருகின்றன. அஃதாவது, பொருள் ஈட்டுவதற்கு எளிய செயல்கள் தீய செயல்களாகவே இருக்கின்றன. எனவே, எல்லாரும் தீய செயல்களாக உள்ள எளிய செயல்களையே செய்ய முற்பட்டு விடுகின்றனர்.

செயல்களின் உயர்வு தாழ்வு, பெருமை இழிவு அறியாதவர்களே, தாழ்வான, இழிவான, எளிய செயல்களையே செய்ய முற்படுகின்றனர். அவர்கள் அவவாறு செய்வதற்கு ஒர் அடிப்படைக் காரணம், அவர்கள் செயல்களின் தரங்களையும் பெருமைகளையும் சிறப்புகளையும் அறியாமல் இருப்பதே ஆகும். இவற்றை அறிந்தவர்கள், கற்றவர்கள் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்லுவாகளானால், அல்ல செயல்கள் மறைந்தொழியும்; நல்ல செயல்கள் தழைத்தோங்கும்.

அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின் (96)

என்பது திருவள்ளுவப் பேராசானின் திருவாய்மொழி.

நல்லவற்றை நாடவும், அவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு இனிமையாக எடுத்துச் சொல்லவும் வேண்டும். அவ் வகையில் இந்த நூல் அப்பணியைச் செவ்வனே செய்யப் புகுந்தது என்க.

இனி, செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னெல் ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை செயல்களுக்கு இடையில் வரும் இடையூறுகள், இடர்ப்பாடுகள், பொருள் தடைகள், ஆள்தடைகள் எவ்வெவ்வாறு அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்: அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது, என்றிவை பற்றியெல்லாம் மிக விளக்கமாகவும் மிக விரிவாகவும் இந்நூலுள் கூறப்பெறுகின்றன. இனி, இவையெல்லா