பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

செயலும் செயல் திறனும்



இவ்விரண்டு உணர்வுக் கூறுகளும் விளக்கமும் வளர்ச்சியும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அறவே இல்லை. மாந்த இனம் பெற்ற பேறுகள் இவை. இயற்கைப் பேராற்றலால் மாந்தச் சிறப்புயிர்களுக்கு வழங்கப்பெற்ற கொடைகள் இவை.

2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும்

உள்ளத்தின் தேவை, நீர்போல், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடும் தன்மையது. இயங்கும் வல்லமையுடையது.

அறிவின் தேவை, நெருப்பு போல், பற்றிப் படரக் கூடியது. பொருள்களை உட்கவர்ந்து தன்னைக் கரைத்துக் கொள்ளும் தன்மையுது. அடங்கும் ஆழ்மை உடையது.

உள்ளத்தின் தேவையாகிய ஆசை துய்ப்பின் மேல் செலுத்தச் செலுத்த மிகுந்த வேகத்தில் எம்பிப் பாயும் ஆற்றலுடையது. அதுவே உடல் தோற்றத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் அடிப்படை

அறிவின் தேவையாகிய பொருளறிவுணர்வு, நுகர்வின் மேல் செலுத்தச் செலுத்த ஊன்றி ஒன்றும் தகைமையுடையது. அதுவே உயிர் மலர்ச்சிக்கும் பிறவி முடிவுக்கும் அடிப்படை.

உள்ள உணர்வே ஆற்றலாகிறது (Energy).

அறிவுணர்வே பொருளாகிறது (Matter)

உள்ளம் அறிவைத் துணைதேடும்

அறிவு உள்ளத்தின் துணைநாடும்.

உள்ளம் (ஆற்றல் Energy) அறிவிலும் (பொருள் Matter) ஊன்றும் தன்மையது; அதேபோல் அறிவு (பொருள்) உள்ளத்தொடும் (ஆற்றலோடும்) இணையும் தன்மை உடையது. ஒன்றுக்கொன்று கவர்ச்சி உண்டு ஏனெனில் உள்ளம் பெண் தன்மையது. அறிவு ஆண்தன்மையுது

அத்துடன், ஒன்றின் வலி மிகுந்தால் அஃது இன்னொன்றைத் தன்வயப்படுத்தும். எனவே உள்ளம் (ஆற்றல் Energy), அறிவாகவும் (பொருள் Matter)அறிவு (பொருள்) உள்ளமாகவும் (ஆற்றலாகவும்) மாறும்.

உள்ளம் அறிவில் ஊன்றி வலுப்பெறும்பொழுது உள்ளத்தின் அலைவால் (அஃதாவது ஆசையால் பொருள் இயங்குகிறது; செயல் தொடங்குகிறது. அதனால் உலகமும் நடைபெறுகிறது.