பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

201



பெருக்கிக் கொள்ளக் கருதும் பொழுது, அப்பொதுத் தொண்டுக்குத் தொடர்பில்லாத ஒரு வினையில் அல்லது செயலில் ஈடுபாடு கொண்டால், அப்பொதுத் தொண்டும் கெடும்; அவருடைய தொழிலும் கெடும். இரண்டையும் கெடுத்துக் கொள்வது செயல் திறமாகாது என்பதை நாம் தெளிதல் வேண்டும் எடுத்துக்காட்டாக, இலக்கியத் திறமுடைய ஒருவர் தம் இலக்கியப் படைப்புப் பணியுடன் ஒரு துணைவினை செய்ய விரும்பும்பொழுது, வேறு வாணிகத்தில் ஈடுபடுவது, அவ்விலக்கியப் பணிக்கும், அவர் தொடங்கவிருக்கும் வாணிகத்திற்கும் ஒரேபொழுதில் கேடு செய்து கொள்வதாகும். அவர் வாணிகம் செய்து பொருளிட்ட விரும்பினால், அவரின் இலக்கியப் பணிக்குத் தொடர்புடைய பொத்தக அச்சீட்டகமோ, வெளியீட்டகமோ விற்பனையகமோ தாம் அவருக்குத் துணைத் தொழில்களாக அமைய முடியும். அவ்வாறாக சிலர், அவர்களுக்குத் தொடர்பற்ற தொழில்களில் ஈடுபடுவது, அவர் முன்னேற்றத்தைக் கெடுத்துவிடக் கூடியதாகிவிடும்.

வினையால் வினையாக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

என்னும் திருக்குறளின் கருத்தை நாம் ஒர்தல் வேண்டும். செய்கின்ற வினையாலேயே அதுபோலும் பிறிதொரு வினையை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அது மதங்கொண்ட யானையால் அன்ன பிறிதோர் யானையைப் பிணித்ததோடு ஒக்கும். என்பது திருவள்ளுவப் பெருந்தகை கூறும் ஒரு வினையளவு ஆகும் என்க. இத்திருக்குறளுக்குச் சிறப்பு விளக்கமாகப் பரிமேலழகர், தொடங்கிய வினையானே பிறிதும் ஒரு வினையை முடித்தற்கு உபாயம் (உளவு ஆமாறு எண்ணிச் செய்க செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம் என்றார்.

6. இரண்டு படகுகளில் கால் வைத்தல்

இனி, அவ்வாறு செய்ய முற்படுங்கால், நாம் கவனிக்க வேண்டிய கூறுகள் பல. அவற்றுள், ஒன்று, நாம் முன் தொடங்கிய வினையிலேயே முழுதும் ஈடுபட்டுள்ளோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டியது. ஒரு வினையில் ஒருவர் முழு நிலையில் ஈடுபாடு காட்டாமலேயே இன்னொரு வினைக்குத் தாவக்கூடாது. முதலில் தொடங்கிய வினையில் முழு அளவும் முழு முயற்சியும் காட்டுவதே, அதை முழுமையாகச் செய்வதாகும். அதை விட்டுவிட்டு, இடையிலேயே இன்னொரு வினையைச் செய்யத் தொடங்குவது இரண்டு வினைகளையும் கெடுத்து விடுவதாகும். இரண்டு படகுகளில் கால் வைப்பதாகும்.