பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

203அரசர்க்குச் சிறப்பானதாகவும், பிறர்க்குப் பொதுவானதாகவும் பொருள் கொள்ளத் தக்கதென்று எண்ணுதல் வேண்டும் அமைந்தாங்கு ஒழுகான் என்பது, ஏற்கனவே அமைந்த அல்லது அமைத்துக் கொண்ட ஒரு செயலிலேயே முழுமையாகத் திறம்பட ஒழுகாமல் இருப்பவன் என்று பொருள் தருவது. இவ்விடத்தில் ஒழுகுதல் என்பது ஈடுபடுதலைக் குறிக்கும். அளவறியான் என்பது, தன் திறமறியாமல் பிற பிறவற்றையெல்லாம் எண்ணி, ஏங்கி அவற்றுள் ஈடுபாடு கொள்ள விரும்புபவனின் மிகுதுடிப்பினால், அகலக் கால் வைக்கும் அறியாமை. தன்னை வியந்தான். என்பது, தன்னை அளவுக்கு மேல் திறமையும் ஆற்றலும் நிறந்தவனாகக் கருதிக் கொள்ளுதலும், அவற்றால் பெறவிருக்கும் வருவாயைக் கருதி மகிழ்தலும் வியத்தலும் ஆகும். விரைந்து கெடும் என்பது, அவ்வாறானவன் படிப்படியாக ஆனால் உறுதியாகவும் விரைவாகவும் தாழ்ந்துபோவான் என்பது.

உலகில் இரண்டு, மூன்று வினைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமுடையவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி, ஒரே பொழுதில் எட்டும், பத்தும் பத்துக்கும் மேற்பட்டவுமான செயல்களிலும் கருத்துச் செலுத்தும் வல்லமையுள்ள எண் கவனகர் (அட்டவதானி)களும், பதின் கவனகர் (தசாவதானி)களும், பற்பதின் கவனகர் (சதாவதானி)களும் கூட இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கவன (அவதானிப்பு) அடிப்படையில் சிறப்புறுவோர்களே தவிர, செயல்கள் அடிப்படையில் அல்லர். செயல்களைக் கவனிப்பது வேறு செயல்களைச் செய்வது வேறு; இனி, செயல்களைத் திறம்பட நுட்பமாகவும், செப்பமாகவும், திட்பமாகவும் செய்வதோ அவற்றினும் வேறு என்று கருதுதல் வேண்டும். மேலும், அக்கவனகர்கள் கூட ஓர் எல்லைப்பட்ட நேரத்தில், தங்களுக்குப் பயிற்சியுள்ள செயல்களில் மட்டுமேதான் கவனம் செலுத்தமுடியும். எந்நேரத்தும் எல்லாவகைச் செயல்களிலும் எவரும் தங்கள் கவனத்தைச் செய்து விடுதல் அரிதினும் அரிதாகும். ஆளுமைக்குரிய செயல்கள் பற்பல. அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் அறிந்து, அவை காலத்தொடும் இடத்தொடும் சூழலொடும் பொருந்துமாறு வெற்றியுடன் ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குத் தனித்திறம் வேண்டும். அஃது பயிற்சியால் மட்டும் வருவது அன்று. இயற்கையாகவும் அமைவது என்க.

8. எதையும் ஆசையால் செய்யலாகாது

எனவே, ஒரே சமயத்தில் ஒரு செயலில் மட்டுமல்லாமல் இரண்டு மூன்று செயல்களிலும் ஈடுபடும் திறமுடையவர்கள் பொருள் வருவாய் கருதிப் பல வினைகளில் நாட்டங்கொள்வது இயலுவதே. இதைத் திறமையாலும் அறிவாற்றலாலுமே செய்ய வேண்டும். அவையாலன்றி ஆசையால் செய்யலாகாது. புதிய புதிய செயல்கலில் ஈடுபட்டுப் பொருள் திரட்டும் நோக்கம் கொண்டார் சிலர், ஒரே சமயத்தில் இரண்டு