பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

செயலும் செயல் திறனும்



படகுகளில் கால் வைத்துப் பெரிதும் துன்பப்படுவர். சில நேரம் பிறிதொரு தொழிலில் ஈடுபட்டு, முதலில் செய்து கொண்டிருந்த செயலிலும் திறம் குன்றி, வருவாய் இழந்து, துன்பப்படுவர். அவர்கள் அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்ட பெண்ணைப் போல, இல்லதை நாடி உள்ளதையும் இழந்து இடர்ப்பட வேண்டும்.

ஒரு செயலைச் செய்து இதனால் கிடைக்கும் சிறு வருவாயையும், அடுத்துச் செய்ய விரும்பும் பிறிதொரு வினையால் இழந்து போகின்றவர்கள் இவ்வுலகில் பலர்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை,

போகாறு அகலாக் கடை.

(478)

என்னும் பொய்யாமொழியில், போகாறு என்று குறிப்பது செலவை மட்டுமன்றிச் செயலிடுபாட்டின் அகலத்தையும் குறிக்கும் என்றும் கருதுதல் வேண்டும். ஆகவே,

{{block_center|

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

(463)

என்பார் திருவள்ளுவப் பேராசான். இதற்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், பரிமேலழகர், "வலியும் காலமும் இடனும் அறியாது, பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல” என்பார். இங்குப் பிறர் மண் என்றது அரசர்க்குப் பொருந்துவது போல், பிற செயல் என்பது வினை செய்வார்க்கும் பொருந்தும் என்க.

9. அளவறிந்து வாழ்தல்

மேலும் தம் கை முதலீட்டையும், தம் வலிவையும் அறியாது, ஆசைப்படுகின்ற வினையிலெல்லாம் மேல் வருவாய் கருதி ஈடுபடும் ஒருவர், தொடக்கத்தில் அவ்வாறு ஓரளவு பெற்றாலும், போகப்போக, ஆய்ந்து பார்க்கையில் உள்ளதுபோலத் தோன்றியது இல்லை ஆகிவிடும் என்பார் பேராசிரியப் பெருமான்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (479)

என்பது அவர் எச்சரிக்கை.

எனவே, இவ்வனைத்து வகையானும் எண்ணிப் பார்த்தே நம் ஆற்றலையும், பொருள் முதலையும், துணை வலிமையையுமே அளவாக எண்ணிப் பிறிதொரு வினையில் ஈடுபடலாமேயன்றி, ஆசையை அளவாகக் கொண்டு, ஒரு வினை செய்வார், பொருள் வருவாய் கருதி வேறொரு வினையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது கூடாது என்க.

இனி, செயல்பாடு கொள்வார், தமக்குத் துணையாளர்களையும், பணியாளர்களையும் எவ்வாறு தேர்தல் வேண்டும் என்பது பற்றிச் சில கூறி, இத்தொடரை முடிப்போம்.