பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23. துணையாளரையும், பணியாளரையும் அமர்த்துதல்
1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது

நாம் தனியாக ஒரு சில செயல்களைச் செய்யலாமேனும் எல்லாவகைச் செயல்களையும் எப்பொழுதும் நாமே செய்துவிடமுடியாது. பெரும்பாலான செயல்களைப் பிறர் உதவியுடன்தான் செய்யமுடியும். தொடக்கத்திலோ, இடையிலோ இறுதியிலோ வேறு ஒருவரின் உதவி தேவைப்படாத எந்தச் செயலும் உலகில் இல்லை. குறைந்த அளவு இருவராகிலும் ஒரு செயலில் ஈடுபட்டே ஆதல் வேண்டும்.

அன்பிற்கிருவர், அறிவிற்கிருவர், கல்விக்கிருவர், கலைக்கிருவர், நட்புக்கிருவர், வாழ்க்கைக்கிருவர், செயலுக்கிருவர் என்று குறைந்தது இருவர் இருவராகச் சேர்ந்து இயங்கும் உணர்வுகளும், அறிவுக் கூறுகளும், செயல் கூறுகளுமே உலகில் உள்ளன. ஒரே ஒருவர் தனித்து இயங்கும் செயல் எங்கும் இல்லை. நாம் உயிராகப் பிறப்பெடுப்பதற்கே இருவர் செயல் தேவைப்படுகிறது. உண்ணுவதைக் கூட இன்னொருவர் உதவியின்றிச் செய்துகொள்ள இயலாது என்பதை எண்ணிப் பார்க்கவும்.

எனவே, நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு இன்னொருவர் உதவி எந்த வகையிலும், எந்த நிலையிலும் கட்டாயம் தேவை என்பதைச் செயலின் முற்படுவார் எவரும் முன்னதாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பணிக்குத் துணையாக இருப்பவர் பணித்துணையாளர் என்றும், பணியை நம்முடனோ, அல்லது நமக்காகவோ செய்பவர் பணியாளர் என்றும் கூறப்பெறுவர்.

2. பணித்துணையாளர்

பணித் துணையாளர், நம் குடும்ப உறுப்பினராகவோ, நம் நண்பராகவோ, அல்லது சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யும் ஒருவராகவோ, அல்லது நம் முதலீட்டுப் பங்கினராகவோ இருக்கலாம். ஆனால், கட்டாயம் அப்படிப்பட்ட ஒருவரின் உதவி நமக்குத் தேவை. நாமே செயலின் அனைத்துக் கூறுகளையும் கவனிப்பது மிகக் கடினம்.