பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

19



வற்றுக்கும் ஒருபடி மேலாகச் சென்று, நல்ல, அரிய, பயனுள்ள செயல் களைத் திறம்படச் செய்வது எப்படி, எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும் அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் நன்கு எடுத்து விளக்குகிறது இவ்வரிய நூல்.

இந்த வகையில், தமிழில் இதுபோல், இதுவரை, எந்தவொரு நூலும், நமக்குத் தெரிந்த வரையில், வெளிவந்ததில்லை என்றே கூறுதல் வேண்டும். இந்த உண்மையை இதைப் படித்த பின் நன்கு உணர்வீர்கள்; அதனால் ஒரு பெருத்த மகிழ்ச்சியும் முழுநிறைவும் கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையும் நமக்குண்டு.

இதில் கூறப்பெறும் விரிவான, மிக நுட்பமான அறவியல், உளவியல், உலகியல், தொழிலியல், தொழில் நுட்பவியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கெல்லாம், நம் அரிய, இனிய நூலாகிய திருக்குறளிலிருந்தே ஏராளமான எடுத்துக் காட்டுகள் காட்டப்பெறுகின்றன. இஃது அனைவர்க்கும் மகிழ்ச்சியும், வியப்பும், பெருமிதமும் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

எனவே, இதைப் படித்து முடித்தபின், நம் திருக்குறளிலும் இத்தனைச் செய்திகளுண்டா என்று பலருக்கும் ஒரு வியப்பு வினா தோன்றும். ஆம், நம் திருக்குறளில் இதுவும் உண்டு; இதற்கு மேலும் உண்டு. எனவேதான், அதை ஒர் அறநூல், இலக்கிய நூல் என்பதைவிட, அதை ஒரு வாழ்வியல் நூல், இனநலம் காக்க வந்த புரட்சி நூல் என்றெல்லாம் நாம் எடுத்துக் கூறி மெய்ப்பித்து வருகிறோம். நம் இன முன்னேற்றத்திற்குரிய அத்தனைச் செய்திகளையும் திருவள்ளுவப் பேராசான் முன்கூட்டியே நமக்குப் பலவாறு அவரின் ஒண்டமிழ் நூலாம் திருக்குறளின்கண் நமக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார். அவற்றை நாம்தாம் ஆழப் பாராமல் அகலப் பார்த்துவிட்டு, அவற்றையும் புறக்கணித்து வந்திருக்கிறோம் என்பதை, இனியாகிலும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம். அதற்கு இந்நூலே ஒரு கலங்கரை விளக்கமாகவும், வழிகாட்டியாகவும், சான்றாகவும் விளங்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

இந்நூல், நம் தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழில் 1980 பிப்ரவரி (குரல் 1; இசை 10 முதல், 1987 ஏப்ரல் குரல் 18, இசை 10 வரை, ஏழு ஆண்டுகள், 56 தொடர்களாக வெளிவந்த ஆசிரியவுரைக் கட்டுரைகளாகும். இவை கட்டுரை வடிவில் வெளிவந்து கொண்டிருந்த பொழுதே, இஃதோர் அரிய நூல்; மேனாட்டாரும் படித்துப் பயனடைந்து, வியந்து போற்றுவதற்குரிய அரிய செய்திகளைக் கொண்டது; இஃது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றால், நோபல் ப்ரிசு பெறுவதற்கும் உரியது என்று பலரும் அவ்வப்பொழுது நமக்கு