பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

209‘அறிவு, ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது’ என்று சிறப்புரையும் தருவார்.

‘அறிந்தாற்றி’ என்னும் பண்பு இணைச்சொற்கள் அறிந்தும் ஆற்றியும் எனப் பிரிபட்டு ஒரு வினையைத் தானே அறிந்து கொள்ளும் திறத்தையும், வினைக்கிடையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பொறுத்துத் தாங்கி அமைவுகொண்டு மேற்செல்லும் உள்ளத்தின் உண்மையையும் விளங்கி நின்றன என்க.

7. நுண்ணுணர்வு விளக்கங்கள்

இனி, இத்தலைப்பின் கீழ், தொடக்கத்தில் கூறிய செயல் திறம் உடையவர்களுக்கான கூர்மை உணர்வுகளெனும் நுண்ணுணர்வுகள் பற்றி, இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்வது, அவ்வுணர்வுடையவர்களை எளிதில் கண்டு தேர்வதற்குத் துணை செய்யும். ஆகையால், அவை பற்றிச் சிறிது விளக்குவோம்.

அங்குக் கூறப்பெற்ற நாற்பதோர் உணர்வுகளை மூன்று வகையாகப் பகுக்கலாம். அவை,

1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணவுர்கள்.

இவை உயிர்ப்படிநிலை வளர்ச்சியாலும், மரபு வளர்ச்சியாலும், இயற்கையாக அமைவன. இவையே இயற்கை கொடை (Natural Gif) அல்லது உளதாகும் அறிவு (Existant Wisdom) அல்லது உண்மை அறிவு (True Wisdom) (திருக்குறள் 373) என்று கூறப்பெறுகின்றன.

2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்

இவை மாந்த முயற்சியால் அடையப் பெறுவன, இவற்றையே கற்றனைத்துறும் அறிவு என்கிறது திருக்குறள் (336)

3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது

செயற்பாட்டு உணர்வுகள்

இவை சூழ்நிலைகளாலும், உலகியல் ஈடுபாடுகளாலும் மாந்தத் தொடர்புகளாலும், செயலீடுபாடுகளாலும் வளர்த்தெடுக்கப் பெறுவன. உலகம் தழீஇய ஒட்பம் (425) என்றதும் உலகத் தோடு அவ்வது உறைவது (425) என்றதும் இவையே என்க.

இம்மூன்று தலைப்புகளிலும், அங்குக் கூறப்பெற்ற உணர்வுக் கூறுகளைக் கீழ்வருமாறு பாகுபாடு செய்யலாம். இவற்றை மிகக் கவனமாகப் படித்து உணர்ந்து கொள்ளுதல், நமது அறிவுத் திறனையும், தேர்வுத் திறனையும் மிகுத்துக் கொள்வதாகும்.