பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

செயலும் செயல் திறனும்பார்த்து, அஃது அதற்குரிய அளவுடன் செய்யப் பெறுதல் வேண்டும் என்பது அவர் குறிப்பு. அதனை வெறும் அளவு என்று குறிப்பிடாமல், அளவென்னும் ஆற்றல் என்று வலியுறுத்தியும், திறன் என்று அகலப்படுத்தியும், கூறுவார் அவர். இங்குதான் செயல்திறன் முழுமை பெறுகிறது என்பததைக் கவனிக்க வேண்டும்.

"எந்தச் செயலையும் அளவு என்னும் கணக்குத் திறனுடன் செய்ய இயலாதவன், காரறிவை அஃதாவது விளக்கமற்ற அறிவை உடையவனாவான். அவன் செயல்களில் நேர்மை, உண்மை இருக்கா, திருட்டுத்தனமான செயற்பாடுகளே இருக்கும். இத்தவறான நடைமுறை, அளவு என்னும் கணக்குத் திறன் உடையவர்களிடத்தில் இருப்பதில்லை என்னும் பொருளைத் தருகிறது. கீழ்வரும் குறள்,

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

(287)

மேலும், ஒருவன் எதையும் அளவிட்டுக் கணக்குப் பண்ணிச் செய்யப் பழகுவானானால், அவனிடத்தில் அறிவுணர்வு நிலைப்பெற்றிருக்கும். எதையும் நேர்மையாகவும் உண்மையாகவுமே அவன் செய்வான். நேர்மைப் பிறழ்ச்சி அவனிடத்தில் இருக்காது. எப்படி வேண்டுமானாலும் அஃதாவது தவறான அல்லது தீய வழிகளைக் கடைப்பிடித்தேனும் அச்செயலைச் செய்துவிட வேண்டும் என்னும் ஒர் அறமற்ற உணர்வே அளவிட்டுச் செய்யாதவனிடத்தில் வளரும். எனவே, என்றென்றும் அவன் உள்ளத்தில் களவுணர்வும். (திருட்டுணர்வும்) கரவு உணர்வும் (வஞ்சக உணர்வும்) நிலையாக இருந்து கொண்டிருக்கும்” என்னும் பொருளை உணர்த்துகிறது, இன்னொரு குறள்,

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

(288)

"அளவு பண்ணிக் கணக்கறிவுடன், செய்வதைக் கடைப்பிடிக்காதவன், தவறான, பொய்யான, நேர்மையற்ற திருட்டு உணர்வில் மேலும் மேலும் விருப்பமும் ஆர்வமும் உடையவனாகி, அதனையே தொடர்ந்து கடைப்பிடித்து ஒழுகுவான்" என்று இன்னொரு திருக்குறளில் உணர்த்துவார் பேராசான்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்

(286)

எனவே, "இந்நேர்மையற்ற வழிகளில் செயல்களைச் செய்து, அதனால் வருகின்ற செல்வம் கூடி வருவதுபோல் தோன்றி விரைவிற்