பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

217


படிப்படியாகக் குறைந்து இல்லாமற் போய்விடும்” என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

(283)

என்பது, அது.

"ஆகவே, களவும் கரவும் இல்லாத மற்ற நேர்மையான வழிகளில் செயல்களைச் செய்யப் பழகிக் கொள்ளாதவர்கள் தாம் எதையும் அளவுப்படுத்திச் செய்யாமற் போவதால், அவற்றைச் செய்யத் தொடங்கிய அடுத்த பொழுதிலேயே தம் செயல் நிலையினின்று வீழ்ந்து விடுவர்” என்று முடிவாகவும் தெளிவாகவும் சொல்லுவார், அற முதல்வர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

(289)

வரவு செலவு அளவு

இனி, எப்பொழுதுமே ஒரு செயலால் வருகின்ற வருமான அளவையும் அவ் வருமானத்தால் செய்கின்ற செலவுகளின் அளவையும் கணக்குப் பார்த்து, அச்செயலைச் செய்யும் திறமற்றவர்கள் பலவகையான செயல் தாழ்ச்சிகளுக்கு உட்படுவர் என்பதையும், அவ்வாறு கணக்கிட்டுச் செயல் செய்கையில் வருமான அளவு குறைந்திருப்பினும், செலவு அளவு கூடாமல் இருப்பின் தாம் தொடங்கிய செயலுக்கோ, தமக்கோ கேடு வராது என்பதையும் மிகவும் நுண்ணியதாகக் கீழ்வரும் குறளில் உணர்த்திக் காட்டுவர், வாழ்வியல் பேராசான்.

ஆகாறு அளவு இட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை

(478)

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழியன்றோ? எனவே, வரவானாலும், செலவானாலும் கணக்குப் பண்ணிச் செய்திட வேண்டுவது எத்துணை இன்றியமையாததாக இருக்கிறது. இனி, வரவை விடச் செலவுக்குக் கணக்கறிவு அஃதாவது அளவையறிவு முகாமையானது என்பதை அறிதல் வேண்டும்.

கல்வி அளவு

கற்பதைக்கூட எண்ணிப் பார்த்து, அளவு பண்ணி, எதைக் கற்க வேண்டும், எவ்வளவு காலம் கற்க வேண்டும், எத்துணை அளவு கற்க வேண்டும் என்று ஆய்ந்தறிந்து கற்க வேண்டும் என்பது திருக்குறள். கல்விக்கு எல்லையில்லை; எனவே, காலமும் இல்லை, சாகும் வரை