பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

219'கொடுத்துக் கொடுத்து உயர் நிலையில் தாழ்ந்து ஏழையாகப் போயின. பின்னும் அக் கொடுத்தல் பண்பில் விலகா திருப்பதே பழைமையில் சிறந்த பெருமையுடைய குடியாளனுக்குச் சிறப்பு' என்று பொருள் தரும்,

'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று'

(955)

என்றும், ஈதலுக்குச் சிறப்பிலக்கணம் கூறிய அதே திருவள்ளுவப் பேரருளாளர்,

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

(477)

என்றும், அளவையறிவு கொண்டு ஈகையை வளமைப்படுத்துகிறார்.

எந்தத் தேவைக்கு, எவர்க்கு எவ்விடத்து, எவ்வளவு ஈயவேண்டும் என்று மதிப்பிட்டு ஈகின்ற கணக்கியலறிவும் ஒருவர்க்கு தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.

பெரும்பாலும் ஒருவர்க்கு பொருள் செயலாலேயே வரும். பெரும் பொருள் சிறந்த நேர்மையான உயர்ந்த வருவாயைத் தருகின்ற செயல்களாலேயே வரமுடியும். அப்பொழுதுதான் அவர் செல்வராகத் திகழமுடியும். அவ்வாறு செல்வராகத் திகழ்கின்ற பொழுதுதான், அவர் ஈகையறத்தைச் செப்பமாகச் செய்ய முடியும். பொருள் நிறைய வருகின்றதே அல்லது இருக்கின்றதே என்பதற்காகக் கண்டவர்க்குச் கண்டபடி, கண்டவிடத்துக் கண்டவாறு ஈந்து விடக்கூடாது; அக்கால் கணக்கறிவோடு, அளவை அறிவோடு நடந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும் என்பது திருவள்ளுவர் கோட்பாடாகும். எனவே, கணக்கறிவு, ஈகைக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.

வாழ்க்கை அளவு

எனவே, வாழ்க்கை முழுமைக்கும் எல்லா நிலைகளிலுமே கணக்கறிவு மிகமிகத் தேவையான ஒன்றாகும் என்பதில் ஐயமே இல்லை.

வாழ்க்கை, அஃது எத் திறத்தினதாயினும், எத் தரத்தினதாயினும், எந்த வகையினதாயினும், அதிலும் கட்டாயம் ஓர் அளவியலறிவு, கணக்கியலறிவு தேவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

(479)