பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. முடிவுரை

1. சில ஏற்றத்தாழ்வுகள்

இதுவரை கூறப்பெற்ற செய்திகளில், பெரும்பாலும் செயல் கூறுகளான அனைத்தையும் ஒருவாறு நாம் அடக்கிக் கூறியுள்ளோம். இவற்றுள் ஒவ்வொரு கூறும் இன்றியமையாததே. ஒன்று சிறந்து ஒன்று தவிர்ந்தாலும், அல்லது ஒன்றில் கவனம் செலுத்தி ஒன்றில் கவனம் குறைந்தாலும், நாம் எடுத்துக் கொண்ட செயலில், அந்த அளவு குறைகள் நேர்ந்துவிடவே செய்யும். எனவே, போதுமான அளவில் அனைத்துக் கூறுகளிலும் ஒருவர் முழு அளவிலான செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்வதுடன், அவற்றுள் முழுக் கவனமும் கருத்தும் கொள்ளுதல் மிகவும் நல்லது. அல்லாக்கால் செயல் விளைவுகளுள் குறைகள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. அவ்வாறு குறைகள் நேருங்கால், அவை எந்தக் கோணங்களில் நாம் கவனம் செலுத்தாமையால் நேர்ந்துள்ளன என்று தீவிரமாக ஆய்ந்து தெளிந்து கொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதே எச்சரிக்கையான, செயற்கடமையாகும்.

2. அகலக்கால் வையாதே

செயலடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவன இங்குக் கூறப்பெற்றவற்றினும் இன்னும் கூடுதலாகவே இருக்கலாம். ஆனால் அவை யாவற்றினும் பொதுவான ஓர் உண்மை யாதெனில், ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றுள்ளும் அகலக்கால் வைத்துத் தோல்வியுறுவதைவிட, ஏதோ நமக்குப் பொருந்திய ஒன்றினுள் ஆழக்கால் வைத்து வெற்றி பெறுவதே சிறந்ததும் தக்கதும் ஆகும் என்பதைச் செயலுக்கு முன் வரும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது தேவையானதாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை;

போகாறு அகலாக் கடை -

(478)

என்னுங் குறள் மொழி இவ்வகையிலும் பொருத்தமுடையதே.

இனி, இறுதியாக, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது எவ்வளவு எளிது; அதைச் செய்வது எவ்வளவு கடினமானது என்பதைப் பெரும்பாலும் அனைவருமே அறிந்திருப்பர். நாம் இயற்கையாகவே