பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

237



பயனுடையதாகச் செய்தல் வேண்டும். அந்தப் பயன் நோக்கிய செயல்களையே நாம் முனைந்து செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் நாமும் பிறரும் பயன்பெற முடியும்.

ஒரு செயலால் விளையும் நன்மையும் தீமையும் எண்ணி ஆராய்ந்து, அனைவர்க்கும் நலம் தருகின்ற செயல்களையே, அந்த நலனுக்கேற்ற அளவு முயற்சிகளுடன் செய்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பெற்றுள்ளது.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

(511)

முடிவாக நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலைச் செய்தே ஆகல் வேண்டும். அதையே திறம் உடையதாகச் செய்தல் வேண்டும். அது மட்டும் அன்று. அதையே பயனுடையதாகவும் செய்தல் வேண்டும். இனி, அனைத்திலும் பயனுடைய செயலையே திறம் உடையதாகச் செய்தலை வாழ்க்கைக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, இத்தொடர் கட்டுரையை முடிப்பதற்கு முன், ஒரு செயல் எத்துணைக் கருத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் செய்யப் பெறுதல் வேண்டும் என்பதை இவ்வுலகின் அருஞ்செயல் ஒன்றை எடுத்துக் காட்டி விளக்குவதுடன், செயலருமை என்பதும் செயல்திறம் என்பதும் எத்தகையன என்பதையும் உணர்த்திக் காட்டுவோம்.