பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25. செயல்திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

1. அருஞ்செயல்கள்

இவ்வுலகின்கண், மாந்த இனத்திற்கு அறிவு மலர்ச்சியுறாத காலத்திலும் சரி, அறிவு மலர்ச்சியுற்ற காலத்திலும் சரி, எத்தனையோ வகையான அருஞ்செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. உடல் திறத்தாலும், அறிவுத் திறத்தாலும், உள்ளத்திறத்தாலும் இம்மூன்றுஞ் சேர்ந்த ஆளுமைத் திறத்தாலும் மாந்தன் பற்பல அருஞ்செயல்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆற்றியிருக்கின்றான். அவற்றுள் நாம் வியக்கத் தக்கனவும், எண்ணி மகிழத் தக்கனவும், எடுத்துக்காட்டாகக் கருதிப் பார்க்கத் தக்கனவும், பின்பற்றத் தக்கனவும் ஏராளம்.

2. திறன் மிக்கச் செயல்கள்

மாந்தனால் தனித்துச் செய்யப்பெறும் செயல்கள் ஒரு மாந்தனின் தனித்திறனை, அவன் அறிவாற்றலை, ஊக்க உணர்வினை, செயல் திறத்தைப் புலப்படுத்துவனவாகும். மாந்தர்களின் கூட்டுச் செயல்களோ, அனைவரின் ஒன்று சேர்ந்த திறன்களையும் கூட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும். அத்தகைய கூட்டுச் செயல்களைச் செய்கின்றன பொழுது, அனைவரின் மனவுணர்வும், செயல் நோக்கமும், அறிவுத் திறனும் ஒன்றுபட்டு ஒருமுக எண்ணத்துடன் இயங்குதல் வேண்டும். பலபேர்கள் இணைந்து செயல்படும் பொழுது ஒருவர் செய்கின்ற பிழை அனைத்துத் திறப்பாடுகளையும் கெடுத்துவிடுவதுண்டு. அதேபோல் ஒருவர் திறன் பலருக்கும் பெருமை சேர்ப்பதும் உண்டு. உலகின் பெரும்பாலான செயல்கள் கூட்டுச் செயல்களே ஆகும். உலகமே கூட்டுச் செயலால் உருவாவதுதான். ஒரு செயலுக்கு ஒரு வகையான அறிவுத் திறனே போதுவதில்லை. பல்வேறு வகைப்பட்ட அறிவுத் திறன், உணர்வுத் திறன், உழைப்புத் திறன், செயல்திறன் ஆகியவற்றாலேயே செயல்கள் நிகழ்கின்றன; அல்லது நிகழ்த்தப் பெறுகின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், அறிவியல் கூறுகளில், இயல்பியல், வேதியியல், பொறியியல், தொழிலியல், தொழில்நுட்பவியல், நிலவியல், மண்ணியல், விண்ணியல், கலையியல் போலும் அனைத்து அறிவுக் கூறுகளும் இணைந்து இயங்கும் செயல்பாடுகள் மிகு திறம் வாய்ந்தவை.