பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

செயலும் செயல் திறனும்



மாபெரும் மக்கள் விழாவில் அமெரிக்கத் துரதரிடம் சிலை வழங்கப்பட்டது.

பரிசாக வழங்கப்பெற்ற அந்த உரிமைக் கன்னியின் சிலையைப் பல கூறுகளாக்கினர். சிலையின் செப்புத் தோல் 300 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, அவை மட்டும் 49 பெரும் பெட்டிகளில் மிகவும் காப்பாகச் சிப்பம் செய்யப்பட்டன. சிலையின் இருப்புச் சட்டங்கள் இணைப்புகள் கழற்றப்பெற்று 36 பெட்டிகளில் அடைக்கப்பெற்றன. அப்பெட்டிகளை இழு வண்டிகள், தொடர்வண்டி, போர்க்கப்பல் ஆகியவற்றின் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு அமெரிக்கா வந்த சிலை 1886இல் பெட்லோ தீவில் நிறுவப்பெற்றது. பெட்லோ தீவு அதன் பின் உரிமைச் சிலைத் தீவு (Liberty Island) என்றே அழைக்கப்பெறுகிறது.

பயணத்தின்போது எதிர்பாராத வகையில் சிலையின் சில உறுப்புகள் உருமாறிப் போயிருந்தனவாம். இந்நிலை சிலையை அரும்பாடுபட்டு உருவாக்கிய சிற்பிக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் பெரும் வருத்தத்தைத் தந்தது. இதன் மேலும் ஏற்பட்ட சில விளைவுகள் அவர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினது போல் பெருந்துயரைத் தந்தது.

சிலையைப் பெட்லோ தீவில் பொருத்துகையில் அமெரிக்கத் தொழிலாளர்களின் கவனக் குறைவினாலும், பொறுப்பின்மையாலும், செயல்திறக் குறைபாட்டினாலும், உறுப்புகளின் பொருத்துத் திருகாணிகளை அந்தந்தத் தொளைகளில் சரியாகப் பொருந்தாமையாலும் சிலையில் பலவகையான மாற்றச் சிதைவுகள் காலப்போக்கில் ஏற்பட்டன. அவை,

1. உரிமைப் பெருமாட்டியின் தலை, ஈஃபில் அமைந்திருந்த இடத்தைவிட்டு 2 அடி தள்ளிப் போய்விட்டது. இதனால் சிலையின் பீடத்திற்குத் தேவையற்ற அழுத்தம் உண்டாயிற்று. தலையின் தோற்றத்திலும் எழில் குறைந்தது.

2. சிலையின் நடுக்கட்டமைப்பிலும் தொழிலாளர்கள் செய்த தவறுகளால், மகுடத்தில் உள்ள ஒரு கம்பி, சிலையின் கையை இடித்துக் கொண்டு செப்புத் தோலில் தொளையை உண்டு பண்ணியது.

3. மகுடத்தைத் தாங்கிக் கொண்டிருந்த இரும்புச் சட்டம் தேய்ந்து போயிருந்தது.