பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

247



சிலைக்கு இதுவரை 12 தடவைகள் சாயம் பூசப்பெற்றிருக்கிறது. தட்பவெப்ப நிலையினால் தோல் எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பததையும் அவர்கள் அறிவர். நியூயார்க்கு துறைமுகத்தின் நடுவில் 100 ஆண்டுக்காலம் கழித்திருக்கும் உரிமைச் செல்விச் சிலையின் செம்பு தேய்வு அடைந்து எடை மிகவும் குறைந்து போயிருக்கும் என்று நினைத்தனர். ஆனால் 10 விழுக்காடு தான் தேய்மானம் அடைந்துள்ளது என்பதை 1981 இல் நடத்திய ஆய்வு புலப்படுத்தியிருந்தது.

பழுது பார்ப்பதில்தான் மிகவும் பெரிய அளவு பணி காத்திருந்தது. 1300 க்கும் அதிகமான பாளங்கள் ஏறத்தாழ 5000 தூக்கு (Pound) எடையுள்ளவை - நிலைவெள்ளி (எவர்சில்வர்) கொண்டு உருவாக்கப்பெறும் காரணம் இது துருப்பிடிக்காது. ஆனால் உறுப்புகள் அனைத்தும் மூல உறுப்புகளைப் போலவே இருக்கும். புதிய பாளங்கள் தளத்திலேயே உருவாக்கப் பெறும். அவை இரும்பு பாளங்களைப் போலவே அமையும். சிலையின் அருகில் இட நெருக்கடியிருப்பதால், ஒரு சமையத்தில் தொழிலாளர்கள் ஒரு சிலரே வேலை செய்ய முடியும். இதனால் காலத் தாழ்த்தம் ஏற்படும்.

பழுதுபார்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கையிலே சிலை நல்ல நிலையில் இருக்க, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்பாடு செய்யும் ‘சூழ்நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு’ ஒன்று பொருத்தப்படும். பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் சிக்கல் அதிகப்படுகிறது. அவர்களுடைய மூச்சுக் காற்று ஈரத்தை அதிகப்படுத்துகிறது. உடம்பின் சூடும் வெப்ப நிலையை உயர்த்துகிறது. பழுது பார்க்கப்படும் பொழுது கடந்த ஆண்டு மட்டும் 20 இலக்கம் பேர் சிலையைச் சுற்றிப் பார்த்தனர். இந்தப் பழுது பார்ப்புக்கென ஆகும் செலவு மொத்தம் 3 கோடியே 90 இலக்கம் டாலர், என மதிப்பிடப்பெற்றுள்ளது.

(இவ்வுரிமைச் சிலை பற்றிய செய்திகள் அனைத்தும் ‘டாம் பர்ரோ’ அவர்களின் கட்டுரையையும் தினமணி மொழி பெயர்ப்பையும் (23-7-1985) அடிப்படையாகக் கொண்டவை)

4. இறுதிவரை

இங்கு, செயல் திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்ற இவ்வுரிமைச் சிலை செய்யப்பெற்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள், செயற்பாடுகள் மிகப் பலவாகும். அவற்றையெல்லாம் முறைப்பட எண்ணிப் பார்த்து முடிவு செய்தல் வேண்டும்.