பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. எண்ணமும், விழைவும்

1. எண்ணும் திறன்

முதற்கண் விலங்குக்கும் நமக்குமுள்ள வேற்றுமைகளில் தலையாய வேற்றுமை எண்ணுதிறன் ஆகும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அறவே எண்ணுதிறன் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றின் எண்ணுதிறன் ஓரளவுக்கு உட்பட்டதாகவும், அதற்குமேல் வளர்ச்சியற்றதாகவும், உள்ளது. மாந்தனின் எண்ணுதிறன் அவ்வாறில்லை. பறவை, விலங்குகளைக் காட்டிலும் பன்னூறு மடங்கு எண்ணுதிறன் உடையவர்கள் மாந்தர்கள். இன்னுஞ் சொன்னால், நம் எண்ணுதிறன் பயன்படுத்தப் பயன்படுத்த ஆழமாகவும் அகலமாகவும் விரிந்து வளரும் ஆற்றலுடையது. ஆனால், சோம்பல் கரணியமாகவும், அமைந்துவிடும் சூழ்நிலை அடிப்படையிலும் நம்முள் சிலர் தங்களின் எண்ணுகின்ற ஆற்றலை மேன்மேலும் விரிவடையச் செய்து கொள்ளாதவர்களாகவும், இன்னும் சொல்வதானால் அதை மழுங்கடித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எண்ணுதிறனை மிகுத்துக் கொள்ளாதவர்களை நாம் உயர்நிலையுற்ற பெருமைக்குரிய மாந்தர்கள் என்று கூறிவிட முடியாது.

இனி, எண்ணுதிறன் என்றால் என்ன? மனம் பற்றிக் கொள்ளுகின்ற ஒரு பொருளைப்(Subject) பற்றி அறிவுணர்வால், அதனுடை விரிவான தன்மைகளையும் குணநலன்களையும்; தன்மை தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற தன்மையே எண்ணுதிறன் ஆகும். இந்த எண்ணுதிறன்தான் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் வேண்டுவதாகும். எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதற்கு முன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணப்படுதல் வேண்டும். எண்ணிய பின்தான் ஒரு செயலில் நாம் ஈடுபடுதல் வேண்டும். எண்ணாமல் தொடங்குவது தவறு மட்டுமன்று பின்னர் நமக்கு இழுக்கையும் உண்டாக்கிவிடும். இதைத்தான்.

எண்ணித்துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (467).

என்னும் குறளில் நமக்கு அறிவுறுத்துகிறார் திருவள்ளுவப் பேராசான்.